Rகேரள அரசியலிலும் புகுந்த ஜாதி!

Published On:

| By Balaji

ச.அன்வர்

தமிழகத்தில் நாளை நடக்கவிருக்கும் விக்ரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களைவிட, கேரளாவில் நடக்க இருக்கும் 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் வழக்கத்திற்கு மாறாக வேறுவிதத்தில் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது.

இதுவரை கேரளாவின் தேர்தல் அரசியலில் மறைமுகமாக இருந்த ஜாதி, இன்று அப்பட்டமாக வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது இந்த இடைத் தேர்தல்களின் மூலம். வட்டியூர்காவு, அரூர், கோனி, எர்ணாகுளம், மஞ்சீஸ்வரம் ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கு நாளை நடக்கவிருக்கும் இடைத்தேர்தல், பெருத்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது கேரளாவில்.

விஸ்வரூபம் எடுத்த சபரிமலை விவகாரம் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரிகளுக்கு எதிராகத் திருப்பிவிடப்பட்டாலும்… அறுவடையை செய்தது பாரதிய ஜனதா கட்சி அல்ல… காங்கிரஸ் கட்சி என்பது தேர்தல் முடிவுகளின் மூலம் நிரூபணம் ஆனது.மொத்தமுள்ள 20 நாடாளுமன்றத் தொகுதிகளில், 19 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி.

ஆனால் சமீபத்தில் நடந்த பாலா சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் இடதுசாரிகள் மீண்டும் பலம் பெற்றிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

கிட்டத்தட்ட 54 ஆண்டுகள்,பாலா தொகுதியை கைவசம் வைத்திருந்த கேரள காங்கிரஸ் கட்சியின் தலைவரான கே எம் மாணி யின் மறைவுக்குப் பிறகு கடந்த மாதம் அங்கு இடைத்தேர்தல் நடந்தது.

கேரள காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட, ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளரான தடாம் ஜோஸ் எளிதில் வெற்றி பெற்று விடுவார் என்றே எல்லாரும் நம்பினார்கள். ஆனால் அந்த நம்பிக்கையை தகர்த்தெரிந்து இடதுசாரி ஜனநாயக முன்னணி வேட்பாளரான, தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணி சி கப்பன்,,, 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கேரள காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில்தான் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை நடக்கவிருக்கிறது.தேர்தல் பிரச்சாரம் ஒருபுறம் அனல் பறந்தாலும், மறுபுறம் மலையாள மக்களே எதிர்பாராத ஒரு நிகழ்வை அரங்கேற்றினார் 105 ஆண்டுகள் பழமை கொண்ட நாயர் சர்வீஸ் சொசைட்டி யின் தலைவரான சுகுமாரன் நாயர்.

அரசியலிலும் சமூக பங்களிப்புகளிலும், முக்கியத்துவம் பெற்ற நாயர் சமூக மக்களின் மிகப்பெரிய சமுதாய அமைப்பான என்.எஸ்.எஸ் திடீரென்று அரசியல் களத்திற்கு வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

இந்து மக்களின் நம்பிக்கையை சபரிமலை விவகாரத்தில் சீர்குலைத்த தாக இடதுசாரி அரசின் மீது குற்றச்சாட்டை வைத்த என்.எஸ்.எஸ், இடைத்தேர்தல் முடிவுகளை மக்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றும் முரசறிவித்தது.

பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு… என்.எஸ்.எஸ் சின் இந்தத் தாக்குதலை சற்றும் எதிர்பார்க்கவில்லை. சற்று ஆடித்தான் போனார். ஆனால் என் எஸ் எஸ்ஸின் இந்த தாக்குதலுக்குஇடதுசாரிகள் அமைதி காத்த நிலையில்,,, பதிலடி கொடுத்தது பினராயி விஜயன் சார்ந்த ஈழவ சமுதாய அமைப்புகளில் ஒன்றான எஸ்.என்.டி.பி.

கேரளத்தில் பெரும்பான்மையாக உள்ள ஈழவ சமுதாய அமைப்பான எஸ்.என்.டி.பி. யின் தலைவர் வெள்ளப்பள்ளி நடேசன்,,என்.எஸ்.எஸ் சின் இந்த தாக்குதலை வேறுவிதமாக எதிர்கொண்டார்.

ஈழவர்கள் எப்போதெல்லாம் கேரளாவில் முதல்வராக இருக்கிறார்களோ அப்போதெல்லாம் பிரச்சனையை கிளப்புவது என்.எஸ்.எஸ் சின் வாடிக்கை… இது இன்று நேற்றல்ல… திரு ஆர். சங்கர் கேரளாவில் முதல்வராக பதவியேற்றதிலிருந்தே தொடர்கிறது என்றும் திரு அச்சுதானந்தன் காலத்தில் அது நீடித்து, இன்று பினராயி விஜயன் காலம்வரை நகர்ந்துகொண்டே இருக்கிறது. இது சகித்துக் கொள்ள முடியாதது என்று அனல் கக்கி இருக்கிறார்.

மாநிலத்தை ஆளும் இடதுசாரிகள் மீது தாக்குதல் தொடுத்ததற்கு, அரசு பதில் சொல்வதற்கு பதிலாக ஒரு சாதி அமைப்பு பதில் சொல்ல வேண்டிய தேவை எங்கே வந்தது என்கிறது என்.எஸ்.எஸ்.

சங்கனாச்சேரி யிலுள்ள அதனுடைய தலைமையகத்தில்…மாநிலம் முழுவதிலும் இருந்து வந்திருக்கும் என்.எஸ்.எஸ் நிர்வாகிகள், இடைத்தேர்தல் குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள்.

நாயர்களை பகைத்துக்கொண்டு அரசியல் செய்ய முடியாது என்பதை தீர்க்கமாக உணர்ந்த தோழர் பினராயி விஜயன், என்.எஸ்.எஸ் சின் சபரிமலை குறித்தான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்காமல் அறிவார்த்தமான பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஐந்தாண்டுகளில் சபரிமலை மேம்பாட்டிற்காக ஒதுக்கிய தொகை 216 கோடி மட்டும்தான் என்றும்… ஆனால் தாங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் ஆயிரத்து 1265 கோடி ரூபாயை சபரிமலை மேம்பாட்டிற்காக ஒதுக்கி இருப்பதாகவும்… சான்று பகர்ந்து கொண்டிருக்கிறார்.

மேலாக சபரிமலை ஐயப்பன் கோவிலை விமானச் சேவையுடன் இணைக்கும் பொருட்டு… எருமேலி அருகே உள்ள மணிமாலா வில், ஐந்தாவது கேரளத்தின் சர்வதேச விமான நிலையத்தை திறப்பதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருப்பதாகவும்… நிகழ்த்தப்படும் அவருடைய உரை மக்களால் உன்னிப்பாக கவனிக்கவே படுகிறது.

ஆனால் அரசியல் நோக்கர்களின் கருத்து வேறுவிதமாக இருக்கிறது. தன்னுடைய மகன் துஷார் வெள்ளப்பள்ளிக்காக,,, பாரத் தர்ம ஜன சேனா என்ற அரசியல் கட்சியை தோற்றுவித்து, அதை பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியின் கூட்டணியில் அங்கம் பெற வைத்துவிட்டு, இடதுசாரிகளை காப்பாற்ற வெள்ளப்பள்ளி நடேசன் களமிறங்கியது ஏன் என்கிற கேள்வி வேகமெடுத்திருக்கிறது.

அடுத்த முதல்வராக காங்கிரஸ் கட்சியின் நாயர் சமூக முகமான ரமேஷ் சென்னிதாலா வருவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், என்.எஸ்.எஸ் எடுத்திருக்கும் இந்த நிலைபாடு, கேரளாவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த 2018 ம் ஆண்டு மே மாதம் நடந்த செங்கனூர் இடைத்தேர்தலில்… பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்ட அதன் மாநிலத் தலைவரான திரு பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை பெற்ற வாக்குகள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

காரணம் அதற்கு முந்தைய தேர்தலில் அதே செங்கனூர் தொகுதியில் எஸ் என் டி பி ஆதரவோடு பாரதிய ஜனதா கட்சி பெற்ற வாக்குகள் பெறும் 5700 மட்டுமே. ஆனால் இந்த இடைத்தேர்தலில் எஸ்.என்.டி பி ஆதரவின்றி தனித்துப் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி பெற்ற வாக்குகள் 35,270.

அப்போதே நாயர் சமூக வேட்பாளரான திரு ஸ்ரீதரன் பிள்ளைக்கு பின்னால் என்.எஸ்.எஸ் இருந்தது என்ற பேச்சு பரவலாக இருந்தது. அதுபோல இந்த இடைத் தேர்தலிலும் சபரிமலை விவகாரத்தை கிளப்பி விட்டு பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக என்.எஸ்.எஸ் களமிறங்கி இருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

ஆனால் இதை மறுக்கும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கே முரளிதரன் “என் எஸ் எஸ் அரசியல் கட்சிகளை தாக்கவில்லை, அரசையே தாக்குகிறது என்று அறிக்கை கொடுத்திருக்கிறார். என்.எஸ்.எஸ் சின் அறிக்கை பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாகவே அமையும் என்கிறார் மிசோரமின் முன்னாள் கவர்னரும் மூத்த பாரதிய ஜனதா கட்சி தலைவருமான திரு கும்மனம் ராஜசேகரன்.

எது எப்படியோ கேரளாவையும் ஜாதி அரசியல் விட்டுவைக்கவில்லை என்பது தான் உள்ளங்கை நெல்லிக்கனி.

கடந்த முறை மஞ்சீஸ்வரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு… வெறும் 89 வாக்குகளில் தோல்வியை தழுவியகேரள மாநில பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான கே முரளிதரன்..கோனி தொகுதியில் களம் இறங்கி இருப்பது இன்னும் பதற்றத்தை கூட்டுவதாகவே இருக்கிறது.

பார்ப்போம் என்ன நடக்கிறது என்று!

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share