கொரோனா காலத்தில் நம்மில் பலர் ஆரோக்கியத்துக்கு எதிரான நொறுக்குத் தீனிகளை (Junk Foods) அதிக அளவு எடுத்துக்கொண்டதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த நிலை மேலும் நீடிக்காதவண்ணம் வீட்டிலேயே இந்த முந்திரி இனிப்பு உருண்டை செய்து சாப்பிட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
**எப்படிச் செய்வது?**
பீட்ரூட் 50 கிராம், கேரட் 50 கிராமைச் சுத்தம் செய்து ஆவியில் வேகவைத்துத் தோல் நீக்கி நன்கு மசிக்கவும். 100 கிராம் ரவையை நிறம் மாறாமல் வறுத்துத் தண்ணீர்விடாமல் அரைத்துக்கொள்ளவும். 200 கிராம் மைதா மாவைச் சலித்து வைத்துக்கொள்ளவும். 100 கிராம் முந்திரிப்பருப்பை சிறிதளவு பாலில் ஊறவைத்து விழுதாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் சலித்த மைதா, அரைத்த ரவை, முந்திரி விழுது, கேரட், பீட்ரூட் விழுது, 50 கிராம் வெண்ணெய், 50 கிராம் கோவா, ஒரு கப் தேங்காய்த்துருவல் சேர்த்து நன்கு பிசையவும்.
அடிகனமான பாத்திரத்தில் 750 கிராம் சர்க்கரையைச் சேர்த்து தண்ணீர்விட்டுப் பாகு காய்ச்சவும். அதில் சிறிதளவு ரோஜா நிறப்பொடியைப் போட்டு, சில துளிகள் வெனிலா எசென்ஸைச் சேர்க்கவும். அடுப்பில் வாணலியை வைத்து, 500 கிராம் வனஸ்பதியைப் போட்டு, அது உருகி காய்ந்ததும் மாவுக் கலவையைப் பெரிய நெல்லிக்காய் அளவில் உருண்டைகளாக உருட்டிப் போட்டுப் பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும் (அடுப்பை நிதானமாக எரியவிடவும்). எடுத்த உருண்டைகளைச் சர்க்கரைப் பாகில் சிறிது நேரம் போட்டு எடுத்து, தாம்பாளத்தில் பரப்பவும். லேசாக உலர்ந்ததும் பாத்திரத்தில் அடுக்கி மூடி வைத்து தேவையானபோது பரிமாறவும்.
**சிறப்பு**
உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிம தாது, இரும்பு, காப்பர், செலினியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற கனிம தாதுப்பொருள்கள் அதிக அளவு கொண்டது இந்த இனிப்பு உருண்டை. அனைவருக்கும் ஏற்றது.�,