hகொரோனா காலர் ட்யூனுக்கு எதிராக வழக்கு!

Published On:

| By Balaji

கொரோனா வைரஸ் குறித்து, இருமலுடன் தொடங்கும் செல்போன் காலர் ட்யூனுக்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் மத்திய மாநில அரசுகள் சார்பில் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது, இதன் ஒரு பகுதியாக மத்திய அரசு, செல்போன் காலர் ட்யூன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. ஒருவருக்கு போன் செய்யும் போது வழக்கமான ரிங்கிற்கு பதிலாக கொரோனா குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெறுகின்றன. இருமலுடன் தொடங்கும் அந்த காலர் ட்யூனில் குரல் பதிவில் இருமும் போதும், தும்மும் போதும் முகத்தை மறைக்க வேண்டும். கைகளைச் சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

ஆனால் மற்றவர்களுக்கு போன் செய்யும் போது, இதுபோன்று இருமல் சத்தம் கேட்பது மிரட்சியாக இருப்பதாகப் பலரும் கூறி வருகின்றனர். இது நல்லதொரு விழிப்புணர்வு என்றாலும் அந்த இருமல் சத்தத்தை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். முதலில் செல்போன்களுக்கு மட்டும் இந்த காலர் ட்யூன் ஒலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது லேண்ட்லைனுக்கும் இந்த ட்யூனே ஒலிக்கின்றன.

இந்நிலையில் இந்த காலர் ட்யூனுக்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராஜசேகரன் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், செல்போனை எடுக்கும் போதே இருமல் சத்தம் எரிச்சலை ஏற்படுத்துவதால் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு காலர் ட்யூனை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த காலர் ட்யூனால் ஆரோக்கியமாக இருப்பவர்களின் மனநிலையும் மாறுகிறது. வாட்ஸ் அப், ட்விட்டர், குறுஞ்செய்தி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த வழிவகையுண்டு. எனவே இந்த காலர் ட்யூனுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவிருக்கிறது.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share