இனிப்புகளில் முதலிடம் கொடுத்து விருப்பத்துடன் சுவைக்கப்படுவது லட்டு. ‘எப்போது கிடைக்கும்?’ என்று நாக்கின் சுவை நரம்புகளை ஏங்கவைக்கும் லட்டு வகைகளை அவ்வப்போது வீட்டிலும் செய்து ரிலாக்ஸ் டைமில் சாப்பிட்டு மகிழலாம். அதற்கு இந்த கேரட் தேங்காய் லட்டு உதவும்.
**எப்படிச் செய்வது?**
கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் அல்லது நெய்யைச் சேர்த்து உருக்கி, ஏழு அல்லது எட்டு சீவிய பாதாமைச் சேர்த்துப் பொன்னிறமாக வறுத்துத் தனியே எடுத்து வைக்கவும். அதே கடாயில் ஒன்றரை கப் கேரட் துருவலைச் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, ஐந்து நிமிடங்கள் வதக்கவும். இதனுடன் முக்கால் கப் உலர்ந்த தேங்காய்த்துருவல் (டிபார்ட்மென்டல் கடைகளில் கிடைக்கும்) சேர்த்து ஒரு நிமிடம் வறுக்கவும். பிறகு ஒரு கப் கண்டன்ஸ்டு மில்க், சில துளிகள் ரோஸ் வாட்டர் சேர்த்துக் கலந்து, அடுப்பை ‘சிம்’மில் வைத்து, ஐந்து முதல் எட்டு நிமிடங்கள் வேகவிடவும். கலவைக் கெட்டியாகி சுருண்டுவரும். அப்போது வறுத்த பாதாம் சேர்த்து, கைபொறுக்கும் சூட்டுக்கு ஆறவிடவும் (முழுவதுமாக ஆறிவிடக் கூடாது). கையில் எண்ணெய் அல்லது நெய் தடவிக்கொண்டு கலவையை லட்டுகளாகப் பிடிக்கவும். லட்டுகளை சிறிதளவு உலர்ந்த தேங்காய்த் துருவலில் புரட்டி எடுக்கவும். காற்றுபுகாத டப்பாவில் சேகரித்து நான்கு நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
**சிறப்பு**
கால்சியம், வைட்டமின் ஏ, டி, இ சத்துக்கள் அதிகம் நிறைந்த இந்த கேரட் தேங்காய் லட்டு அனைவருக்கும் ஏற்றது. சருமம் வறட்சியடைவதைத் தடுக்கும். பார்வைக் கோளாறுகளை நீக்கும்.�,