�
கேரளாவில் தனது பெற்றோருடன் இத்தாலிக்கு சென்று திரும்பியுள்ள 3 வயது குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏஎன்ஐ வெளியிட்டுள்ள செய்திப்படி, குழந்தை இத்தாலிக்கு சென்று மார்ச் 7ஆம் தேதி நாடு திரும்பியதாகவும், தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்ட பிறகு எர்ணாகுளம் மருத்துவக்கல்லூரியில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் பெற்றோர்களுக்கு தற்போது வரை எந்த விதமான நோய் அறிகுறிகளும் இல்லாவிட்டாலும் அவர்களும் மருத்துவமனையில் தனி வார்டில் வைக்கப்பட்டுள்ளனர் என மருத்துவமனையின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் கொரோனா தடுப்பு அதிகாரி அமர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ குழந்தையோடு விமானத்தில் பயணித்தவர்களின் பட்டியல் மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குழந்தையுடன் மிக அருகில் பயணித்தவர்கள் கண்காணிக்கப்படுவார்கள், மேலும் குழந்தை நலமாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இன்று (மார்ச் 9) காலை ஜம்மு காஷ்மீரில் 63 வயது பெண்மணி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவால் 1, 10,098 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 3,831 பேர் மரணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்ட ஒருவருக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது
**-பவித்ரா**�,