நாட்றாம்பள்ளி அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் சென்னை காவலர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், கணியம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (37). இவர் கடந்த 2003ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்தார். தற்போது இவர், சென்னை மாநகர காவல் துறையில் சட்டம்-ஒழுங்கு பிரிவில் காவலராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் சுரேஷ்குமாருக்கு கண் அறுவை சிகிச்சை செய்வதற்காக, விடுப்பு எடுத்துக் கொண்டு தனது சொந்த ஊரான வேலூருக்கு சென்றார். இதையடுத்து இன்று (அக்டோபர் 24) காலை தனது நண்பர்களான கணியம்பாடியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் (28), சாத்துமதுரையைச் சேர்ந்த முனிசாமி (28), பாகாயம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் (52) ஆகியோருடன் சுரேஷ்குமார் கணியம்பாடியில் இருந்து ஈரோடுக்கு காரில் சென்றார் . முருகேசன் என்பவர் காரை ஓட்டி சென்றுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி மேம்பாலம் வாணியம்பாடி- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை வழியாக கார் சென்றபோது முன்னால் சென்றுக்கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது பின்னால் சென்ற கார் வேகமாக மோதியதில், காரின் முன்பக்கம் நொருங்கியது. இதில், காவலர் சுரேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற மூவரும் படுகாயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நாட்றாம்பள்ளி காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு வாணியம்படி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு உயிரிழந்த காவலர் சுரேஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த வாரத்தில்தான் விழுப்புரம் மாவட்டம் கோளியனூர் நடுத்தெருவை சேர்ந்த பிரசன்னா(26) டிஜிபி அலுவலகத்தில் இருந்து காமராஜர் சாலையை கடக்க முயன்றபோது, காமராஜர் சாலை வழியாக அடையார் நோக்கி அதிவேகமாக வந்த கார் ஒன்று, அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சமீப காலமாக விபத்தில் காவலர்கள் உயிரிழப்பது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
**-வினிதா**
�,