பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு தினமும் ஒரே மாதிரியான உணவுகளைக் குழந்தைகளுக்குக் கொடுத்து அனுப்பாமல், ‘இன்னிக்கு மம்மி என்ன கொடுத்துவிட்டிருப்பாங்க?’ என்ற எதிர்பார்ப்புடன் குழந்தைகளை லஞ்ச் பாக்ஸத் திறக்கவைப்பதில்தான் இருக்கிறது, அம்மாக்களின் கிச்சன் டேலன்ட். எனவே, ரைஸ், வெரைட்டி ரைஸ், மினி இட்லி, சப்பாத்தி ரோல் எனக் கூடுமானவரை தினமும் ஓர் அயிட்டம் கொடுத்து அனுப்பும் வகையில் மெயின் மெனுவைத் திட்டமிட்டுக் கொள்ளலாம். அதற்கு இந்த தோசை – கேப்சிகம் மசாலாவும் உதவும்.
**என்ன தேவை?**
தோசை – ஒன்று (பெரிய சைஸ்)
நறுக்கிய குடமிளகாய் (சிவப்பு, பச்சை, மஞ்சள்) – 4 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் – ஒன்று (நறுக்கவும்)
தக்காளி – பாதியளவு
சோம்பு – ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் – முக்கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்
இஞ்சி – பூண்டு விழுது – கால் டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை, புதினா இலை – சிறிதளவு
சர்க்கரை – கால் டீஸ்பூன்
நெய் அல்லது எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவைக்கேற்ப
**எப்படிச் செய்வது?**
தோசையை சிறு துண்டுகளாகப் பிய்த்து தனியே வைக்கவும். கடாயில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், குடமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். இதனுடன் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பின்னர் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், உப்பு, சர்க்கரை சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு கொத்தமல்லித்தழை, புதினா தூவி பிய்த்து வைத்திருக்கும் தோசையைச் சேர்த்து, இரண்டு நிமிடங்கள் கிளறிவிடவும். லஞ்ச் பாக்ஸில் வைத்து கொடுத்தனுப்பவும்..
அசைவம் சாப்பிடுபவர்கள் இதனுடன் ஒரு முட்டையை உடைத்து ஊற்றிக் கிளறி கொடுக்கலாம்.
**சைடிஷ்: தக்காளி இனிப்புச் சட்னி**
ஒரு தக்காளி, 2 டீஸ்பூன் சர்க்கரை, 2 சிட்டிகை உப்பு இவற்றை சேர்த்து, நன்றாக அரைக்கவும். ஒரு கடாயில் 2 டீஸ்பூன் வெண்ணெய் அல்லது எண்ணெய் விட்டு, சூடானதும் அரைத்த கலவையை சேர்த்து, ஒரு கிராம்பு, சிறிய துண்டு பட்டை சேர்த்து, அரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். நன்றாக வற்றும் வரை அடுப்பை சிறு தீயில் வைத்து வேகவிடவும். மறுபடியும் அரை கப் தண்ணீர் ஊற்றி வற்றும் வரை தீயில் வைக்கவும். நன்றாக பச்சை வாசனை போகும் வரை வற்றவைத்து எடுத்தால் இனிப்பு சட்னி தயார். சாஸ் போன்று இருக்கும் இதை தோசை – கேப்சிகம் மசாலாவுடன் கொடுத்து அனுப்பலாம்.
**[நேற்றைய ரெசிப்பி: சாதம் கட்லெட்](https://www.minnambalam.com/public/2021/11/25/1/rice-cutlet)**
.�,