குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கடந்த 5 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் சென்னையில் பெரும்பாலான இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
உரிமம் இன்றி செயல்படும் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூடி நடவடிக்கை எடுக்க வேண்டும், அதுகுறித்த அறிக்கையை மார்ச் 3ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி அரசு சார்பில் தமிழகம் முழுவதும் உரிமம் இன்றி செயல்பட்ட 400 ஆலைகள் இதுவரை மூடப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, நிலத்தடி நீரை எடுப்பதற்காக உரிமத்தை எளிய முறையில் பெறுவதற்கான வழிமுறைகளைத் தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கடந்த 27ஆம் தேதி மாலை 6 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றுடன் போராட்டம் 5ஆவது நாளை எட்டியுள்ளது.
சென்னை போன்ற நகரங்களைப் பொறுத்தவரைப் பெரும்பாலானோர் குடிப்பதற்கு மட்டுமின்றி, சமையலுக்கும் கேன் வாட்டரையே பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தால் வேளச்சேரி, அசோக் நகர் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ரூ.35க்கு விற்பனையாகி வந்த 25லிட்டர் தண்ணீர் கேன் தற்போது குறைந்த பட்சம் ரூ.45க்கு தொடங்கி ரூ.60 வரை விற்பனையாகிறது. இதனால் சென்னைவாசிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஒரு சில இடங்களில் அதிக விலை கொடுத்தாலும் தண்ணீர் கிடைக்கவில்லை என்கின்றனர்.
இதனிடையே சென்னையில் தங்கு தடையின்றி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (மார்ச் 2) பொதுப்பணித் துறை செயலாளர், குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதில் உடன்பாடு ஏற்படவில்லை எனில் போராட்டம் தொடரும் என்று குடிநீர் உற்பத்தியாளர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று இதுதொடர்பான வழக்கு நாளை (மார்ச் 3) நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
**கவிபிரியா**�,