கொரோனா: தமிழகத்தில் கோயில்கள், ஜவுளிக்கடைகளுக்கும் கட்டுப்பாடு!

Published On:

| By Balaji

கொரோனா எதிரொலியாக தமிழகத்தில் ஏற்கனவே கல்வி நிலையங்கள், வணிக வளாகங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக சுகாதாரத் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று (மார்ச் 19) முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன் முடிவில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதாவது, “தமிழ்நாட்டில் உள்ள பெரிய நகரங்களில் ஏற்கனவே வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் தற்போது அதிகம் செல்லக் கூடிய ஒருங்கிணைந்த குளிர்சாதன வசதி கொண்ட பெரிய ஜவுளி கடைகள் நகைக் கடைகள், பல்வகை பொருட்களை விற்பனை செய்யும் மிகப் பெரிய கடைகள் போன்றவற்றில் அதிக மக்கள் கூட்டம் கூடுவதால் இவை நாளை முதல் மூடப்படும்.

எனினும் நகைகடை போன்றவற்றில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட ஆர்டர் படி பொருள்களைப் பெற்று செல்ல மட்டும் ஒரு தனி வழியை பயன்படுத்தலாம்.

அத்தியாவசிய பொருட்கள் விற்கும் மளிகை கடைகள், பல்பொருள் அங்காடிகள், காய்கறி கடைகள், மருந்தகங்கள் மற்றும் உணவகங்கள் ஆகியவை வழக்கம் போல் செயல்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

”சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில், பழனி முருகன் கோயில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ஆகியவற்றில் நாளை முதல் மார்ச் 31ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் நிறுத்தி வைக்கப்படும். ஆகம விதிகளின்படி இக்கோயில்களில் அனைத்து கால பூஜைகளும் எப்பொழுதும் நடைபெறவேண்டும்.

அதுபோன்று மக்கள் வரக்கூடிய பெரிய தேவாலயங்கள் மசூதிகள் ஆகியவற்றுக்கும் மார்ச் 31ஆம் தேதி வரை பொதுமக்கள் வருவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். பிற மாநிலங்களிலிருந்து நோய் பரவ வாய்ப்பு உள்ளதால் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிற மாநிலங்களிலிருந்து வரும் ரயில் போக்குவரத்தையும் கணிசமாக குறைக்கவும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், “ரயில் மற்றும் சாலை மார்க்கமாக வரும் பயணிகளை தீவிரமாக சோதனை செய்யவும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனிமைப் படுத்தப்பட வேண்டிய பயணிகளை அழைத்துச் செல்வதற்காக விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் சிறப்பு வாகன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அத்தகைய வாகனங்கள் கிருமிநாசினி மூலம் அடிக்கடி தூய்மைப்படுத்தவும் ஓட்டுநர்கள் முழு பாதுகாப்புடன் வாகனங்களை இயக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிருமிநாசினி மற்றும் பிற உபகரணங்களை தேவையான அளவு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வாங்கிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு எடுத்து வரும் இத்தகைய நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று இந்த ஆலோசனையின் முடிவில் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

**கவிபிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel