உரங்களின் மீதான சரக்கு-சேவை வரியை முற்றிலும் நீக்க வேண்டும்!

Published On:

| By Balaji

உரங்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை முற்றிலும் நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் கே.ஆர்.சுதந்திரராசு, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அனுப்பியுள்ள அந்த மனுவில், “கடந்த நான்கு மாதங்களில் பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட உரங்கள் 70 முதல், 80 சதவிகிதம் வரை விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக விவசாயிகளுக்குக் கூடுதல் உற்பத்தி செலவாகிறது. மேலும் பெரும் கடன் சுமை ஏற்படுகிறது. எனவே மத்திய பட்ஜெட்டில் உர விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உரங்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை முற்றிலும் நீக்க வேண்டும்.

தென்னை மற்றும் எண்ணெய் வித்து பயிர் செய்யும் விவசாயிகள் நலன் கருதி, இறக்குமதி செய்யப்படும் பாமாயில், கடுகு மற்றும் சூரியகாந்தி எண்ணெய் மீது அதிக அளவில் இறக்குமதி வரி விதிக்க வேண்டும். தேங்காய் எண்ணெய் மீது மத்திய அரசு விதிக்கும் வரியை குறைக்க வேண்டும்.

மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் ஸ்டார்ச் மாவுக்கு, 12 சதவிகித வரியை, 5 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும். மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் ஊக்கத்தொகையை ஆண்டுக்கு ரூ.6 ஆயிரத்தில் இருந்து, ரூ.24 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். விவசாயத்துக்கு 33 காசு என்ற மானிய வட்டியில் வழங்கப்படும் ரூ.3 லட்சம் கடனை, ரூ.6 லட்சமாக உயர்த்த வேண்டும்.

சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 1,000 லிட்டர் டீசல், 50 சதவிகித மானிய விலையில் வழங்க வேண்டும். தமிழகத்தில் அதிகமாக சாகுபடியாகும் மஞ்சள், மரவள்ளிக்கிழங்குக்கு என தனியாக ஈரோடு மற்றும் நாமக்கல்லில் வாரியம் அமைக்க வேண்டும்” என்று கோரியுள்ளார்.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share