கிச்சன் கீர்த்தனா: சுரைக்காய் சாமை சாதம்

Published On:

| By Balaji

‘பளிச்சென்ற தோற்றத்தையும் சுவையையும் மட்டும் கருத்தில்கொண்டு, பாலிஷ் மேல் பாலிஷ் செய்யப்பட்ட அரிசியில் சத்துகள் மிகவும் குறைந்துவிடுகின்றன’ என்ற நெடுங்காலமாக உணவியலாளர்கள் ஒலிக்கும் எச்சரிக்கை மணியைக் காதில் வாங்கிக்கொள்ளாமல், தங்களுக்குப் பழக்கமான உணவுமுறையையே பலரும் கடைப்பிடித்து வந்த போக்கு, சமீப காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. மேலும், ஊட்டச்சத்துகளின் சுரங்கமாக விளங்கும் சிறுதானியங்களின் பெருமையை உணர்ந்து, அவற்றைப் பற்றி தெரிந்துகொள்வதிலும், சிறுதானியங்களைப் பயன்படுத்தி உணவு வகைகளைச் செய்து பரிமாறுவதிலும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த வரவேற்கத்தக்க போக்கை மேலும் பலப்படுத்த, நீங்களும் ஆரோக்கியமாக வாழ இந்த சுரைக்காய் சாமை சாதம் செய்து சாப்பிடலாம்.

**என்ன தேவை?**

சாமை – 200 கிராம

சுரைக்காய் (நறுக்கியது) – ஒரு கப்

பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி – தலா ஒன்று (நறுக்கவும்)

சீரகத்தூள் – அரை டீஸ்பூன்

பூண்டு – 7 பல்

சாம்பார் பொடி – அரை டீஸ்பூன்

மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்

கடுகு, கறிவேப்பிலை – தாளிக்கத் தேவையான அளவு

கொத்தமல்லித்தழை – சிறிதளவு

எண்ணெய் – 5 டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

**எப்படிச் செய்வது?**

சாமையைப் பத்து நிமிடங்கள் ஊறவைத்துக் களைந்து தண்ணீரை வடித்துவைக்கவும். பிறகு ஒரு குக்கரை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் தக்காளி, சாம்பார் பொடி, சீரகத்தூள், பூண்டு, மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து, சுரைக்காயையும் சேர்த்து சுருள வதக்கவும். பிறகு ஒரு பங்கு சாமைக்கு இரண்டரை பங்கு என்கிற கணக்கில் தண்ணீரை இதனுடன் சேர்த்துக் கொதிக்கவிடவும். தண்ணீர் கொதிக்கும்போது ஊறவைத்த சாமையையும் சேர்த்து, குக்கரை மூடி இரண்டு விசில்விட்டு இறக்கவும். சுரைக்காய் சாமை சாதம் ரெடி. குக்கரில் ஆவி அடங்கியதும் திறந்து மல்லித்தழைகளைத் தூவிப் பரிமாறவும்.

**[நேற்றைய ஸ்பெஷல்: தொற்று பரவலைத் தடுக்கும் சைவ உணவுகள் என்ன?](https://minnambalam.com/public/2022/01/02/1/sunday-special-foods)**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share