மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காணொலிக் காட்சி மூலமாக நேற்று (ஆகஸ்ட் 19) நடைபெற்றது. அதில், அமைச்சர்கள் நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஜெய்ப்பூர், கவுகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய மூன்று விமான நிலையங்களை தனியார் முயற்சியில் மேம்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நடப்பாண்டில் கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்மூலம் கரும்பு குவிண்டால் ஒன்றுக்கு 285 ரூபாய் கொள்முதல் விலையாக விவசாயிகளுக்குக் கிடைக்கும்.
இக்கூட்டத்தில் முக்கியமாக தேசிய வேலைவாய்ப்பு முகமை என்ற புதிய அமைப்பை உருவாக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “பொதுவான தகுதித் தேர்வை நடத்த தேசிய வேலைவாய்ப்பு முகமை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முடிவு நாட்டில் வேலை தேடும் இளைஞர்களுக்கு பயனளிக்கும்” என்று கூறினார்.
மத்திய அரசு துறைப் பணியிடங்கள் (non-gazetted vacancies) மற்றும் பொதுத் துறை வங்கிகளின் காலிப் பணியிடங்களுக்கு தேசிய அளவில் ஒரே பொதுத் தேர்வை இந்த முகமை நடத்தும். அதாவது, ஒவ்வொரு ஆண்டும் அரசு விளம்பரம் செய்யும் பல்லாயிரக்கணக்கான பதவிகளுக்கு இந்த நிறுவனம் ஒரு நுழைவுத் தேர்வை நடத்தும்.
பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு, தேசிய ஆட்சேர்ப்பு முகமை வரமாக இருக்கும். பொது தகுதித் தேர்வு மூலம், ஏராளமான தேர்வுகள், விலைமதிப்பற்ற நேரம் மற்றும் செலவுகள் குறையும். மேலும், வெளிப்படைத்தன்மைக்கு இது ஊக்குவிப்பாக இருக்கும்” என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுபோலவே, “மத்திய அரசு பணியிடங்களுக்குத் தேர்வுகளை நடத்த தற்போது 20க்கும் மேற்பட்ட ஏஜென்சிகள் உள்ளன. ஆனாலும், மூன்று ஏஜென்சிகள் மூலமாக மட்டுமே பொது தகுதித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. காலப்போக்கில் அனைத்து ஏஜென்சிகளையும் இணைத்து ஒரே ஏஜென்சி மூலம் தகுதித் தேர்வை நடத்த இந்த முகமை உருவாக்கப்பட்டுள்ளது” என்று மத்திய அரசின் செயலாளர் சந்திரமவுலி தெரிவித்துள்ளார்.
**எழில்**�,