மத்திய அரசு கொண்டுவந்து இந்தியா முழுவதும் போராட்டங்களை உருவாக்கிவிட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஐநா மனித உரிமை ஆணையமும் தன்னை ஓர் இடை மனுதாரராக இந்த வழக்கில் சேர்த்துக்கொள்ளுமாறு உச்ச நீதிமன்றத்தில் நேற்று (மார்ச் 3) மனுத் தாக்கல் செய்திருக்கிறது. இது குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் முக்கியமான நகர்வாக தேசிய அரங்கிலும் சர்வதேச அரங்கிலும் கவனிக்கப்படுகிறது.
ஐநா மனித உரிமைகள் ஆணையர் மிச்செல்லி பேச்லெட் ஜெரியா சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், தான் ஐக்கிய நாடுகள் சபையின் முதன்மை மனித உரிமை அதிகாரி என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.
“சர்வதேச மனித உரிமைச் சட்டத்தைப் பின்பற்றுவதை ஊக்குவிப்பதும், இந்த நோக்கத்தை மனத்தில் கொண்டு உள்நாட்டு நீதிமன்றங்களை ஆதரிப்பதும், சர்வதேச சட்டக் கடமைகளைச் செயல்படுத்துவதை உறுதி செய்வதில், அவர்களின் அரசியலமைப்பு அல்லது நீதித்துறை செயல்பாட்டுடன் ஒத்துழைத்தல் எனது கடமை” என்று சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமை ஆணையர், தான் ஏற்கனவே ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம், அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம், ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் உள்ள மாநிலங்களின் இறுதி மேல்முறையீட்டு நீதிமன்றங்களில் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து மூன்றாம் தரப்பாகத் தலையிட்ட முன்னுதாரணங்களை உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.
தனது மனுவில் ஐநா மனித உரிமை ஆணையர் என்ன சொல்லியிருக்கிறார்?
“சிஏஏ கொண்டுவர கூறப்பட்ட நோக்கம் பாராட்டத்தக்கது. அதாவது மத அடிப்படையில் துன்புறுத்தப்படுவதிலிருந்து சில நபர்களைப் பாதுகாத்தல், நடைமுறைகள் மற்றும் தேவைகளை எளிதாக்குதல் மற்றும் ஒழுங்கற்ற சூழ்நிலையில் குடியேறியவர்கள் உட்பட அத்தகைய நபர்களுக்குக் குடியுரிமை வழங்குவதை எளிதாக்குதல் ஆகியவற்றை இந்தச் சட்டம் கூறுகிறது. அதே நேரம், சர்வதேச மனித உரிமைச் சட்டம் மற்றும் அகதிகள் உட்பட புலம்பெயர்ந்தோருக்கு அதன் பயன்பாடு தொடர்பான முக்கியமான பிரச்சினைகளை சிஏஏ எழுப்புகிறது. பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் மத ரீதியிலான சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்களில் அகமதியா, ஹசாரா, ஷியா பிரிவினர் உள்ளனர். இவர்களது நிலைமையும், குடியுரிமை திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அம்சங்களின்படி பாதுகாப்பு பெறத்தக்கதாக உள்ளது. இடம்பெயர்தல் தொடர்பான நிர்வாக நடவடிக்கைகளைப் பொறுத்தமட்டில் அவை, சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சட்டத்தின் முன் அனைவரும் சமம். இதை இந்தியாவும் உறுதிபடுத்திட வேண்டும். இந்த வழக்கைப் பொறுத்தமட்டில், இந்திய அரசியலமைப்பு சட்டத்துடன் குடியுரிமை திருத்தச் சட்டம் பொருந்துகிறதா என்பதை ஆராய்வதில் உச்ச நீதிமன்றத்துக்கு ஒத்துழைக்க நாங்கள் விரும்புகிறோம். எனவே மூன்றாம் தரப்பு இடையீட்டு மனுதாரராக எங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்” என்று ஐநா மனித உரிமை ஆணையர் தன் மனுவில் கூறியிருக்கிறார்.
ஐநா மனித உரிமை ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், “குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இது இந்திய நாடாளுமன்றத்தின் இறையாண்மை வழங்கியிருக்கும் அடிப்படை உரிமை. இந்தியாவின் இறையாண்மை தொடர்பான விஷயங்களில் அந்நிய தரப்பினர் தலையிட எவ்வித முகாந்திரமும் இல்லை. இதை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தும் என்று நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.
**-வேந்தன்**�,