ராஜன் குறை
குடியுரிமை சீர்திருத்தச் சட்டம் (Citizenship Amendment Act) கொண்டுவரப்பட்டதிலிருந்து நாடெங்கும் போராட்டங்கள் நிகழ்கின்றன. (சிஏஏ என்று இனி இந்த சட்டத்தைக் குறிப்பிடுவோம்) டில்லியில் ஷாஹின்பாக் என்ற இடத்தில் இஸ்லாமியப் பெண்கள் ஒரு நெடுஞ்சாலையில் அமர்ந்து தொடர் இருப்பு மறியல் செய்யத் தொடங்கியது மொத்த இந்தியாவின், உலகத்தினரின் கவனத்தைக் கவர்ந்துள்ளது. இது போலவே வட கிழக்கு டெல்லியில் போராடியவர்கள் மீது சென்ற வாரம் குண்டர்களும், போலீஸும் தாக்குதல் தொடுக்க அது இஸ்லாமியர்களைக் குறிவைத்து தாக்கிய மிகப்பெரிய மதக்கலவரமாக மாறியது. இன்றுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை 43 என்று கூறப்பட்டாலும் ஏராளமானவர்கள் காயப்பட்டுள்ளனர். பலர் வீடுகளும், கடைகளும் எரிக்கப்பட்டு அகதிகளாக்கப்பட்டுள்ளனர். சிஏஏ-விற்கு எதிராக முஸ்லிம்கள் போராடுவதால் அவர்களைத் தாக்குவது என்பது நிகழ்ந்துள்ளது.
உண்மையில் ஷாஹின்பாக்கிலும் சரி, அது போல நாடெங்கிலும் உருவாகியுள்ள போராட்டக்களங்கள் பலவற்றிலும் முஸ்லிம்களுடன் இணைந்து முஸ்லிம்கள் அல்லாத பல முற்போக்காளர்களும், சிவில் சமூக பிரமுகர்களும், சமூக செயல்பாட்டாளர்களும் போராடுகின்றனர். ஆனால் எல்லா இடங்களிலும் போராட்டங்கள் முஸ்லிம்களை மையப்படுத்தி, பிறர் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் வகையில்தான் நடைபெறுகின்றன. அதற்குக் காரணம் இயல்பாகவே இந்த சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானதாக இருப்பதுதான் காரணம். அதாவது அதனால் பாதிப்புக்குள்ளாவது முதன்மையாக முஸ்லிம்களாக இருக்கலாம் என்பதுதான் காரணம். ஆனால் போராட்டத்தில் பங்கேற்கும் முஸ்லிம் அல்லாதவர்கள் பிரச்சினை முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும்தான் என்றும், இந்தச் சட்டத் திருத்தம் அரசியல் நிர்ணய சட்டத்திற்கே எதிரானது, குடியுரிமையை மதரீதியாகத் தீர்மானிப்பது, அதனால் அனைவரும் போராட வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
இன்றுவரை எந்த இடத்திலும் முஸ்லிம்களே இல்லாமல் இந்துக்கள் மட்டுமே சிஏஏ-வை எதிர்த்துத் தொடர்ந்து தர்ணா போராட்டம் நடத்துவதாகத் தகவல் இல்லை. மேலும், இந்த போராட்டத்தில் கலந்துகொள்பவர்கள் சிஏஏ-விற்கு எதிரான இந்துக்கள் “Hindus Against CAA” என்ற ஒரு பதாகையைக் கூட எழுதி தொங்கவிடுவதில்லை. கையில் பிடித்துக்கொண்டு நிற்பதில்லை. இதனால் இந்து பெரும்பான்மைவாதிகளால் முஸ்லிம்களைத் தனிமைப்படுத்தி தாக்க முடிகிறது. இந்த பிரச்சினையை எப்படி அணுகுவது என்பதை அவசரமாக அனைவரும் சிந்திக்க வேண்டும்.
**மத ரீதியாகப் பிளவுபடுத்தும் திட்டம்**
சிஏஏ சட்டம் கொண்டுவந்ததன் நோக்கமே மக்களை மதரீதியாகப் பிளவு படுத்துவதுதான். ஏனெனில், இந்த சட்டத்தின் பின்னணியில் இருப்பது அஸ்ஸாம் மாநிலத்தில் நடந்த தேசிய குடியுரிமை பதிவேடு அமலாக்கம். இந்த பின்னணியைப் புரிந்துகொண்டால்தான் சிஏஏ சட்டத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். அஸ்ஸாமில் குடியுரிமை பதிவேடு என்பது இந்திய, பாகிஸ்தான் பிரிவினை முதலே, 1951 முதலே, இருந்து வருகிறது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். அது அந்த ஆண்டிற்குப் பிறகு தொடர்ந்து பேணப்படவில்லை. பங்களா தேஷிலிருந்து நிறைய பேர் குடியேறுகிறார்கள் என்பதால் அஸ்ஸாமியர்கள் நிகழ்த்திய பல போராட்டங்களுக்குப் பிறகு, 1985 ஆம் மீண்டும் குடியுரிமை பதிவேட்டைச் சீர் செய்ய மத்திய அரசு ஒப்புக்கொண்டாலும், அது 2019 ஆம் ஆண்டுதான் நிறைவு செய்யப்பட்டது.
அஸ்ஸாமில் வசிக்கும் அனைவரும் மார்ச் 25, 1971 என்ற தேதிக்கு முன் அங்கே பிறந்தவராகவோ, அல்லது அவரது பெற்றோர் அங்கே பிறந்தவராகவோ இருக்க வேண்டும். அதற்கான சான்றுகளை அளித்து நிரூபிக்கவில்லையென்றால் அவர்கள் குடியுரிமை அற்றவர்கள் ஆகிவிடுவார்கள் என்பது குடியுரிமை பதிவேட்டின் அடிப்படை. அங்குள்ள பத்தொன்பது இலட்சம் பேரால் இந்த வகையில் தங்கள் குடியுரிமையை ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதில் முன்னாள் குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது அவர்களின் குடும்பமும் அடக்கம். இந்த பத்தொன்பது இலட்சம் பேரில் ஏழு இலட்சம் பேர் இஸ்லாமியர்கள் என்று கூறப்படுகிறது. மீதமுள்ளவர்களில் பெரும்பாலும் இந்துக்கள்; ஐந்து இலட்சம் பேர் பெங்காலி இந்துக்கள்.
குடியுரிமை சீர்திருத்தச் சட்டம் பாகிஸ்தான், பங்களா தேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று இஸ்லாமிய நாடுகளிலிருந்து இஸ்லாமியர்கள் அல்லாத ஆறு மாற்று மதத்தினர் (இந்துக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், பார்சிக்கள், பெளத்தர்கள், ஜைனர்கள்) மதரீதியான துன்புறுத்தல் காரணமாக இந்தியா வந்தால் அவர்களுக்கு ஐந்தாண்டுகளில் குடியுரிமை வழங்கலாம் என்று கூறுகிறது. இந்த சட்டத்தின்படி அஸ்ஸாமில் இப்போது குடியுரிமை அற்றவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான பெங்காலி இந்துக்கள் தாங்கள் பங்களா தேஷில் மத ரீதியாக துன்புறுத்தப்பட்டதால் குடியேறியதாகக் கூறினால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படலாம். இதை அஸ்ஸாமியர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். சிஏஏ-விற்கு எதிராக அங்கே அனைத்து மக்களும் வெகுண்டெழுந்து போராடினர்.
இதன் மற்றொரு பரிமாணம் என்னவென்றால் அஸ்ஸாமில் குடியேறிய பங்களா தேஷ் இஸ்லாமியர் எத்தகைய துன்புறுத்தலால் வந்திருந்தாலும் குடியுரிமை பெற முடியாது என்பதுதான். பங்களாதேஷிலிருந்து ஒரு பெங்காலி இந்துவும், ஒரு பெங்காலி முஸ்லிமும் வந்திருந்தால் இந்துவுக்கு குடியுரிமை கிடைக்கும், முஸ்லிமுக்குக் கிடைக்காது. அதே போல அஸ்ஸாமிலேயே பிறந்து வளர்ந்த பெங்காலியாக இருந்தாலும் சரியான சான்றாதாரங்கள் இல்லாததால் குடியுரிமை இழப்பவர்கள் இந்துவாக இருந்தால் குடியுரிமை பெற முடியும், முஸ்லிமாக இருந்தால் தடுப்பு முகாம்தான்.
நாடு முழுவதும் தேசிய குடியுரிமை பதிவேடு உருவாக்கப்படும் என்று ஏற்கனவே பாரதீய ஜனதா கட்சி கூறியுள்ளதால் அனைத்து மாநிலங்களிலும் ஒரு தேதியை நிர்ணயித்து அதற்கு முன் ஒருவரோ, அவரது பெற்றோரோ இந்தியாவில் பிறந்த சான்றிதழைக் காட்ட வேண்டும், இல்லாவிட்டால் குடியுரிமை பதியப்படாது என்ற நிலை வரலாம் என்ற அச்சம் நிலவுகிறது. பெரும்பாலான ஏழை மக்கள் முன்காலத்தில் பிறப்பைப் பதிவு செய்ய மாட்டார்கள். அதனால் அவர்கள் குடியுரிமை கேள்விக்கு உள்ளானால் இந்துக்கள், கிறிஸ்துவர்கள் என ஆறு மதத்தவர்கள் எப்படியும் நாங்கள் பாகிஸ்தான், பங்களா தேஷிலிருந்து வந்திருந்தால் கூட குடியுரிமை உண்டே, அதனால் குடியுரிமை கொடுங்கள் என்று சொல்லி குடியுரிமை பெற்றுவிடலாம். ஆனால் தக்க சான்றாதாரங்கள் இல்லாத இஸ்லாமியர்கள் குடியுரிமை பெற முடியாது என்பதால் இந்த சட்டம் மத ரீதியாக நாட்டை பிளவுபடுத்துகிறது.
உண்மையிலேயே அண்டை நாடுகளிலிருந்து துன்புறுத்தப்பட்டு வந்தவர்களுக்குக் குடியுரிமை வழங்க வேண்டுமென்றால் ஏற்கனவே உள்ள சட்டங்களின்படியே வழங்கலாம். அல்லது மதத்தைக் குறிப்பிடாமல் தேவையான மாற்றங்களைச் செய்து கொள்ளலாம். எனவே மத ரீதியாகப் பிரிக்கும் இந்த சட்டம் முஸ்லிம்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றுவதற்கான ஒரு அடித்தளம் என்பதே நாடு தழுவிய போராட்டத்திற்குக் காரணம். ஐநா உட்பட பல சர்வதேச அமைப்புகள் இந்த சட்டத்தைக் கண்டித்துள்ளன. தொடர்ந்து கண்டித்து வருகின்றன.
**முஸ்லிம்கள்தான் போராட வேண்டுமா?**
போராட்டக்களத்தில் உள்ள பலரும், அரசியல் கட்சிகளும் சொல்வது போல இந்த சட்டத்தை மதச்சார்பின்மையை நம்பும், மத நல்லிணக்கத்தை விரும்பும் அனைவரும் எதிர்க்க வேண்டும் என்பதுதான் உண்மை. அதன்படியே பலரும் போராடுகிறார்கள்.
ஆனால் போராட்டக்களத்தில் உள்ள முஸ்லிம்கள் மத அடிப்படையில் அடையாளப் படுத்தப்படுகிறார்கள். முஸ்லிம் அல்லாதவர்கள் தங்கள் மத அடையாளத்தை முன்னிலைப்படுத்துவது இல்லை. குறிப்பாக இந்துக்கள் தங்களை இந்துக்கள் என்று கூறிக்கொள்வதில்லை. இதற்கான காரணங்கள் பல. அவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம்.
மதச்சார்பின்மை: பொதுவெளியில் தங்கள் மத அடையாளத்தை, குறிப்பாக பெரும்பான்மை அடையாளமான இந்து அடையாளத்தை, மதச்சார்பற்ற மனப்போக்கு கொண்டவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று நினைக்கிறார்கள்.
முற்போக்கு சிந்தனை: இடதுசாரி சிந்தனை உள்ளவர்கள், பகுதறிவாளர்கள் கடவுள் மறுப்பு, விதிக் கோட்பாட்டு மறுப்பு ஆகியற்றை கடைபிடிப்பவர்கள். இவர்கள் அதனால் இந்துக்கள் என்று கூறிக்கொள்ள தயங்குகிறார்கள்.
பார்ப்பனீய, ஜாதீய எதிர்ப்பு: பெரியாரிய சிந்தனையாளர்கள், அம்பேத்கரிய சிந்தனையாளர்கள் உள்ளிட்ட பல ஜாதி மறுப்பு சிந்தனையாளர்கள் இந்து மதம் பார்ப்பனீய, ஜாதீய அடிப்படை கொண்டது என்பதால் இந்து என்று கூறிக்கொள்வதில்லை.
இந்த காரணங்கள் எல்லாமே சரியாக இருக்கலாம் என்றாலும் இன்று சிஏஏ எதிர்ப்புப் போராட்டம் முஸ்லிம்களுக்கான போராட்டம் என்றோ, “முஸ்லிம்கள் அவர்களுக்காக போராடுகிறார்கள் பிறர் ஆதரிக்கலாம்” என்றோ அமைவது பாரதீய ஜனதா கட்சியின் பிளவுபடுத்தும் நோக்கத்திற்கு பலியாவதாகவே இருக்கும். முஸ்லிம்களைத் தனிமைப்படுத்தும்.
இந்து என்பதற்கு சாராம்சம் எதுவும் எந்த காலத்திலும் இருந்தது கிடையாது. ஒவ்வொரு பகுதியிலும் ஏராளமான கடவுள்களும், வழிபாட்டு, சடங்கு முறைகளும், நம்பிக்கைகளும் கொண்ட மிகப்பெரிய மக்கள் தொகுதியைத்தான் சட்டரீதியாக இந்து என்று அடையாளப்படுத்தி அவர்கள் பெரும்பான்மை என்கிறார்கள். அதனால் ஒரு கடவுள் மறுப்பாளர், ஜாதி மறுப்பாளர், வேத மறுப்பாளர் இந்து என்று தன்னை சொல்லிக்கொள்வதை யாரும் கேள்வி கேட்க முடியாது. “இயற்கையே கடவுள், நான் இயற்கையின் ஒரு பகுதி; அதனால் தனியாக எந்த கடவுளையும் ஏற்க மாட்டேன்” என்று ஒருவர் சொன்னால், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று சொன்னால், “ஜாதிகள் இல்லையடி பாப்பா” என்று சொன்னால். அவர் இந்து அல்ல என்று யாரும் அறுதியிட முடியாது. இதையெல்லாம் சொன்ன பல மகான்கள், கவிஞர்கள், ஞானிகள் இந்துக்கள் என்றுதான் கருதப்படுகிறார்கள்.
அதை மனதில் கொண்டு சி.ஏ.ஏ -விற்கு எதிரான போராட்டத்தில் “சிஏஏவை எதிர்க்கும் இந்துக்கள்” என்ற பதாகையை உயர்த்திப் பிடிப்பது மக்கள் மத்தியில் பெரும் தெளிவைத் தரும். இல்லாவிட்டால் இது ஏதோ முஸ்லிம்கள் பிரச்சினை என்றே எளிய மக்கள் புரிந்துகொள்வார்கள். அது பாரதீய ஜனதாவின் நோக்கத்திற்குதான் உதவி செய்வதாக இருக்கும்.
அரசியல் கட்சிகள்தான் இதைச் செய்யவேண்டும் என்பதல்ல. குடிமைச்சமூக அமைப்புகள், தன்னார்வலர்கள் இந்த பதாகையை முன்னெடுக்கலாம். உண்மையில் இறை நம்பிக்கையுள்ள இந்துக்கள் பலர் கூட இந்த போராட்டங்களில் பங்கெடுக்கிறார்கள். அவர்கள் போராட்ட மேடையில் தங்களை இந்துக்கள் என்று கூறிக்கொள்கிறார்கள்.
ஆனால் இந்துக்கள் மட்டுமே செய்யும் தர்ணா எங்கும் நடப்பதாக தெரியவில்லை. “Hindus Against CAA” என்ற பதாகை எங்கும் கண்ணில் தென்படுவதில்லை. அது உருவானால் இஸ்லாமியர்களுக்கு உண்மையில் உறுதுணையாக இருக்கும். எளிய மக்களும், சர்வதேச பார்வையாளர்களும் புரிந்துகொள்வார்கள். பாஜக-வின் இந்து பெரும்பான்மைவாதம் கேள்விக்கு உள்ளாகும்.
இந்து அடையாளத்தை ஏற்பதையும், மறுப்பதையும் ஒரு யுத்த தந்திரமாகத்தான் (strategy) முற்போக்காளர்கள் கொள்ள வேண்டுமே தவிர சாராம்சமாக (essence) கருதக்கூடாது என்பதே முக்கியம். இந்த நேரத்தில் இஸ்லாமியர்கள் மத ரீதியாக தனிமைப்படக் கூடாது என்பதே அவசரமான தேவை என்று தோன்றுகிறது.
**கட்டுரையாளர் குறிப்பு:**
ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com
�,”