தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான அறவழிப் போராட்டங்கள் கூர்மை அடைந்துகொண்டே இருக்கின்றன. முதலில் கல்லூரி மாணவர்கள் அளவில் தொடங்கிய இந்த போராட்டம், பின் பல்வேறு சமூக அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டது.
டிசம்பர் 18 ஆம் தேதி மாலை குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ராஜ்யசபாவில் அதை ஆதரித்து நிறைவேற்றிக் கொடுத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டை முற்றுகையிட முயற்சித்து மமக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அதில் உளவுத்துறை கணக்கிலேயே சுமார் 5 ஆயிரம் பேர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது, போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை கைது செய்ய வேண்டாம் என்று எடப்பாடியிடம் இருந்து போலீசுக்கு வந்த அறிவுறுத்தலையும், அதற்கு சொல்லப்பட்ட காரணத்தையும் டிஜிட்டல் திண்ணையில், ‘எடப்பாடி வீடு முற்றுகை, கைது தவிர்க்கப்பட்ட பின்னணி’ என்ற தலைப்பில் எழுதியிருந்தோம்.
இந்நிலையில் டெல்லியில் அமித் ஷாவை சந்திப்பதற்கு முன்னால் ஊடகங்களுக்கு பேட்டியளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் நடக்கும் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் பற்றிய கேள்விக்கு… “ போராடுவது ஜனநாயக உரிமை. அதன்படி போராட்டம் நடத்திவிட்டு அவர்கள் தானாகவே கலைந்துவிடுகிறார்கள்” என்று பதில் சொன்னார்.
ஆனால் அமித் ஷாவை சந்தித்துவிட்டு எடப்பாடி தமிழகம் திரும்பும் முன்னரே, குடியுரிமை சட்டத்துக்கு எதிராகப் போராடுபவர்கள் எத்தனை பேராக இருந்தாலும் வழக்குப் பதிவு செய்யுமாறு தமிழக போலீஸாருக்கு முதல்வரிடம் இருந்து உத்தரவு பறந்திருக்கிறது. அதன்படி மமக, மாணவர் அமைப்புகள் உள்ளிட்ட போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து வருகிறது தமிழக போலீஸ்.
இதுபற்றி மமக நிர்வாகிகள்,போராட்டங்களில் ஈடுபட்டிருக்கும் மாணவர்கள், ஜமாத்தார்கள் சிலரிடம் பேசினோம்.
“பொதுவாகவே கட்சிகள், அமைப்புகள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ளும் ஒவ்வொருவர் மீதும் வழக்குப் போடும் நடைமுறை கிடையாது. அவ்வப்போது நடக்கும் மக்கள் பிரச்சினைக்கான ஆர்பாட்டங்களின் போது கைது செய்து, திருமண மண்டபங்களில் வைத்திருந்து மாலையே விடுதலை செய்துவிடுவார்கள். அதுபோன்ற ஆர்பாட்டங்களில் பல வழக்குகள் நீதிமன்றத்துக்கே செல்லாமல் போலீசாலேயே முடிக்கப்படும்.
இலங்கை தூதரகத்தை முற்றுகை போன்ற முக்கியப் போராட்டங்களில் கூட ஒவ்வொருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யவில்லை. போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் மட்டுமே வழக்குப் பதிவுச் செய்யப்பட்டது. ஆனால் இப்போது போலீஸார் பின்பற்றும் நடைமுறை என்பது வித்தியாசமாகத்தான் இருக்கிறது. இதற்கு முன் கூடங்குளத்தில் போராடியவர்கள் மீதுதான் ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதுவும் மத்திய அரசு தொடர்பான பிரச்சினைதான். இதுவும் மத்திய அரசு தொடர்பான பிரச்சினைதான்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் டிசம்பர் 18 ஆம் தேதி மமக நடத்திய முற்றுகைப் போராட்டத்துக்குப் பின் தமிழகம் முழுதும் ஜமாத்துகள் சார்பில் ஆங்காங்கே போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களும், அவர்களுடன் காங்கிரஸ், கம்யூனிஸ்டு, திமுக உள்ளிட்ட கட்சியினரும் கலந்துகொண்டு வருகிறார்கள். ஆனால் போராட்டங்களை ஒருங்கிணைப்பது ஜமாத்தார்தான்.
இஸ்லாமிய விவகாரங்களை கவனிப்பதற்காகவே தமிழக காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவில் தனி துறை இருக்கிறது. இதில் பணியாற்றும் உளவுத்துறை அதிகாரிகள் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முஸ்லிம்கள் அடர்த்தியாக இருக்கும் பகுதிகளின் சூழலைப் பற்றி நன்கு அறிந்தவர்கள். அவர்கள் போராட்டம் வலுவாக கட்டமைப்படுகிறது, இந்தப் போராட்டத்துக்கு அரசியல் கட்சியினரின் ஆதரவும் இருக்கிறது. ஜல்லிக்கட்டுப் போராட்டம் போல இது நீடித்த நிலைத்த போராட்டமாக மாற வாய்ப்பிருக்கிறது என்று தகவல் அனுப்பியிருக்கிறார்கள். இதன் பிறகுதான் இந்தப் போராட்டங்களை ஒடுக்குவதற்கு ’மாஸ் கேஸ்’ என்ற ஆயுதத்தை பிரயோகிக்க உத்தரவிட்டிருக்கிறது மத்திய அரசு.
இதன்படியே மமக பேரணியில் கலந்துகொண்ட சுமார் 3600 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பேரணி நடக்கும்போதே சென்னை, சென்னை சுற்றுப்புறத்தைச் சேர்ந்த நுண்ணறிவுப் பிரிவினர் வீடியோ கேமராக்களோடு குவிந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மமக நிர்வாகிகள், தொண்டர்களின் பட்டியலைத் தயாரித்துவிட்டனர். அதன் அடிப்படையிலேயே அனைவரின் மீதும் வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது. மறுநாள் 19 ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த மாணவர்கள் கலந்துகொண்ட போராட்டத்திலும் 600 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது” என்றவர்கள் தொடர்ந்தனர்.
“இதுபோல பெருமளவில் வழக்குப் பதியப்படுவதால் அடுத்தடுத்து நடக்கும் போராட்டங்களின் வீரியத்தைக் குறைக்கலாம் என்று கருதுகிறது உளவுத்துறை. நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் ஒவ்வொரு ஜமாத் நிர்வாகிக்கும் போன் போட்டு, ‘ஏம் பாய் உங்களுக்கு இந்த வேலையெல்லாம்… கட்சிக்காரங்க போராடுவாங்க. கேஸ் வந்தாலும் வாங்கிக்குவாங்க. நீங்கள்லாம் என்ன செய்வீங்க. கோர்ட், கேஸ்னு வருஷக் கணக்கா அலைஞ்சுகிட்டிருப்பீங்களா?’ என்று அழகாக பேசி போராட்டங்களுக்கு செல்லாமல் இருக்க மிரட்டல் என்ற தொனியே இல்லாமல் மிரட்டி வருகிறார்கள்.
இதன் விளைவு செங்குன்றம் ஆர்பாட்டத்தில் தெரிந்தது. செங்குன்றம் அனைத்து ஜமாத் சார்பில் நடக்கு மீலாடி விழாவுக்கே 5 ஆயிரம் பேருக்குக் குறையாமல் வருவார்கள். ஆனால் இப்போது குடியுரிமை எதிர்ப்புப் போராட்டத்துக்கு அனைவரும் வரவேண்டும் என்றும் உத்தரவிட்டும் சுமார் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் பேர் வரைதான் வந்திருக்கிறார்கள். இதையே உளவுத்துறையினர் தங்களின் வெற்றியாகக் கருதுகிறார்கள். ஆனால் ஓரிரு இடங்களில் இதுபோல் கூட்டம் குறைந்தாலும் மற்ற இடங்களிலெல்லாம் எந்த வித மிரட்டலையும் மீறி ஆயிரக்கணக்கானோர் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்” என்கிறார்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள்.
�,”