ஆரா
வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள 60 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் வறட்சி நிதி உதவியாக 2ஆயிரம் ரூபாய் வீதம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்தார் முதல்வர். இந்தத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் நீதிமன்றம் சென்ற நிலையில், இது அரசின் கொள்கை முடிவு என்று கூறி மனுவை தள்ளுபடி செய்துவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்.
ஏற்கனவே பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் அறிவித்த நிலையில், இப்போது இந்த 2000 ரூபாய் நிதி உதவி என்பது தேர்தலுக்கானது என்று எதிர்க்கட்சிகள் சாடியுள்ளனர். ஆனால் இது முதல்வர் அடித்த சிக்ஸர் என்று அமைச்சர்கள் புகழ் பாடுகின்றனர்.
தமிழ்நாட்டின் பல கிராமங்களில் பலதரப்பட்ட மக்களும் இரண்டாயிரம் ரூபாய்க்காக வி.ஏ.ஓ.க்களையும், லோக்கல் அதிமுக பிரமுகர்களையும் அணுக ஆரம்பித்துவிட்டனர்.
வங்கி பாஸ்புக் ஜெராக்ஸ், ரேஷன் கார்டு ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு கிராமங்களில் பெண்கள் தத்தமது பகுதியில் இருக்கும் அதிமுக பிரமுகர்களையும், மக்கள் நலப் பணியாளர்களையும் பார்த்து தங்கள் பெயர் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கிறதா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.
இப்படி ஒரு போக்கை கிராமங்களில் காண்பது ஒருவகையில் வேதனையான விஷயம். தமிழ்நாடு என்பது சமூக நலத் திட்டங்களிலும், தற்சார்பிலும் முன்னேறியிருக்கிறது என்று சொல்லித்தான் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடுகள் நமக்குக் குறைக்கப்படுகின்றன. இதை ஒரு பக்கம் சொல்லிக் கொள்ளும் அரசு இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் 60 லட்சம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கிறார்கள் என்று அதே சட்டமன்றத்தில் அறிவித்து, ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் அடிமாட்டுத் தொகையை போட எத்தனிக்கிறது. இதை கொள்கை முடிவு என்று சொல்லி தடுக்க முனையாத நீதிமன்றத்தின் வார்த்தைகள் இன்னும் வேதனை தருகின்றன.
**எது கொள்கை முடிவு?**
அண்மையில் தமிழக அரசு சூரிய மின் சக்தி கொள்கை முடிவுகளை வெளியிட்டது, தொழில் கொள்கை முடிவுகளை மேற்கொண்டது. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது அரசின் கொள்கை முடிவு என்று நீதிமன்றத்தில் வாதிட்டது.
பரவலான மக்களின் நலனுக்காக ஒரு குறிப்பிட்ட நெறிமுறையைப் பின்பற்றுவதும், அதை மாற்றுவதும்தான் கொள்கை முடிவு.
ஆனால் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 2 ஆயிரம் ரூபாய் போடுவது என்பது கொள்கை முடிவா? இதுதான் அரசின் வறுமை ஒழிப்புக் கொள்கையா? இதுதான் வறுமை ஒழிப்புக் கொள்கை என்றால் இத்தனை பத்தாண்டுகளாக பல்வேறு ஐந்தாண்டுத் திட்டங்கள் வகுத்தது ஏன்?
**புள்ளிவிவர மோசடி!**
தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மக்களுக்காக என்று சொல்லி அரசு இதை அறிவித்திருக்கிறது. ஆனால் அரசின் புள்ளி விவரங்களின்படி வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள மக்களின் எண்ணிக்கை 60 லட்சம் அல்ல” என்று சுட்டிக் காட்டுகிறார் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் ஆறுமுகம்.
அவரது விளக்கத்தைப் பார்க்கும் முன் சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார் என்பதை ஒருமுறைப் பார்த்துவிடுவோம்.
“பல மாவட்டங்களில் ‘கஜா’ புயலின் தாக்கத்தினாலும், பருவமழை பொய்த்ததன் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினாலும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும், குறிப்பாக விவசாயத் தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழைகள், பட்டாசுத் தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள், கைத்தறி தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், மரம் ஏறும் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள், காலணி மற்றும் தோல் பொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள், கைவினைஞர்கள் மற்றம் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியுதவியாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும்” என்று அறிவித்தார்.
“இதனால், கிராமப்புறத்தில் வாழும் சுமார் 35 லட்சம் ஏழைக் குடும்பங்களும், நகர்ப்புறத்தில் வாழும் சுமார் 25 லட்சம் ஏழைக் குடும்பங்களும், ஆக மொத்தம் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழும் சுமார் 60 லட்சம் ஏழைக் குடும்பங்கள் தலா 2,000 ரூபாய் சிறப்பு நிதி உதவியைப் பெறுவர்” என்று தெரிவித்த முதல்வர், இதற்கென, 1,200 கோடி ரூபாய் 2018-19 துணை மானியக் கோரிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கூறியிருக்கிறார்.
முதல்வரின் இந்த சட்டமன்றப் புள்ளி விவரங்களைத்தான் கேள்விக்கு உட்படுத்துகிறார் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான செந்தில் ஆறுமுகம்.
“வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் 60 லட்சம் குடும்பங்களுக்கு 2000 ரூபாய் அளிக்க இருப்பதாக முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். 2 கோடி குடும்பங்கள் தமிழகத்தில் இருக்கின்றன. இதில் 60 லட்சம் அதாவது 30% பேர் வறுமைக் கோட்டில் இருக்கிறார்கள் என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் சொல்லியிருக்கிறார். இது பொய்யான புள்ளி விவரம்.
இதை அரசின் மற்ற ஆவணங்களே சொல்கின்றன. அந்தியோதயா அன்னயோஜனா அரிசித் திட்டத்தின் கீழ் வறியோர்களிலும் வறியோர்கள் என்ற ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் தமிழ்நாட்டில் 18 லட்சம் பேர்தான். கடந்த வருட பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்தபடி தமிழகத்தில் 11.2% பேர்தான் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கிறார்கள்.
அப்படியானால் 30% பேரை வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்கள் என்று சொல்லி 60 லட்சம் பேருக்கு 2ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்குவது எப்படி? இந்தப் புள்ளிவிவர முரண்பாடுகளைக் களையாமல் தேவைப்படும் நபர்களைத் தாண்டி 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவது தேர்தலை முன்னிட்டுத்தான்.
**வறுமைக் கோடு வரையறை என்ன?**
எனவே வறுமைக்கோடு பற்றிய வரையறையை தமிழக அரசு வெளியிட வேண்டும். தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருக்கும் குடும்பங்கள் எத்தனை என்ற வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். அதன் பின் 2 ஆயிரம் ரூபாயை உள்ளபடியே வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்கு மட்டும் வழங்க வேண்டும். இப்போது 60 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு 2000 என்பதன் மூலம் ஓட்டுக்கு சட்டபூர்வமான பணம் என்பதுதான் எங்கள் கருத்து” என்று கூறினார் செந்தில் ஆறுமுகம்.
செந்தில் ஆறுமுகம் கூறிய புள்ளிவிவரம் சரியா என்று அறிய, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் வலைத் தளத்தில் ஆராய்ந்தோம்.
தமிழகத்தில் மொத்தம் 1 கோடியே 97 லட்சத்து 82ஆயிரத்து 593 குடும்ப அட்டைகள் இருக்கின்றன என்று தெரிவிக்கும் இத்தளத்தில் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் இலவச அரிசி பெறும் குடும்ப அட்டைகள் 18 லட்சத்து 62 ஆயிரத்து 615 என குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ஆக வறியோரிலும் வறியோர் என்றழைக்கப்படும் குடும்ப அட்டைகள் இவைதான். விதிகளைக் கொஞ்சம் தளர்த்திப் பார்த்தாலும் தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் குடும்பங்கள் 20 லட்சம்தான் இருக்கும். ஆனால் தமிழக முதல்வர் கூடுதலாக 40 லட்சம் குடும்பங்களை வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் என்று அறிவித்திருக்கிறார்.
எனவே தமிழகத்தில் வறுமைக் கோடு என்பதன் வரையறை என்ன என்பதற்கான விளக்கம் தேவைப்படுகிறது.
**அரசு என்பது எதற்கு?**
ஆதிவாசியிடம் நாகரிகம் தொற்றி ஒவ்வொரு கட்டமாய் வளர்ந்து அரசமைப்பு முறை வரை எட்டியிருக்கிறது மனித சமூகம்.
அரசு என்பது என்ன? யார் யாரிடம் வரிபெற வேண்டுமோ அவர்களிடம் வரிபெற்று ஒட்டுமொத்த மக்களுக்கும் பொதுமையான நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதுதான் அரசு.
தனிநபர்கள் செய்ய முடியாத செயல்களை செய்வதற்குத்தான் அரசாங்கம் என்று இருக்கிறது. பாலம் கட்டுதல், குளம் வெட்டுதல், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், ஆகியவற்றை செய்வதற்குதான் அரசாங்கம் இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் செய்யாமல், தேர்தல் நேரத்தில் வறுமையில் இருப்பவர்கள் என்ற பெயரைச் சொல்லி கணிசமான மக்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து ஓட்டு வாங்கப் பார்க்கிறது. இதுதான் அரசா?.
ஒரு கிராமத்தில் 2ஆயிரம் ரேஷன் கார்டுகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் பணம் போடப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். 2 ஆயிரம் குடும்பமும் 2 ஆயிரம் ரூபாயை மிஞ்சிப் போனால் எத்தனை நாளைக்கு வைத்து செலவு பண்ண முடியும்? ஒரு வாரம், மிஞ்சிப் போனால் இரண்டாவது வாரமே இரண்டாயிரம் ரூபாய் காலியாகிவிடும்.
ஆனால் அதையே இப்படி யோசித்துப் பாருங்கள். 2 ஆயிரம் பேருக்கும் தலா 2 ஆயிரம் ரூபாய் கொடுப்பதை மொத்தமாகக் கணக்கிட்டால் 40 லட்சம் ரூபாய் வருகிறது.
இந்த 40 லட்சம் ரூபாயை அந்த கிராமத்துக்கான குடிதண்ணீர் தொட்டிகள் கட்டலாம், பள்ளிக் கூடங்கள் கட்டலாம், கழிவறைகள் கட்டலாம், சாலைகள் கட்டலாம், ஆறுகளுக்குக் கரைகள் கட்டலாம். ஆனால் இதையெல்லாம் விட்டுவிட்டு அவரவர் வங்கிக் கணக்கில் கட்டுவதுதான் அரசா? இதன் பெயர் கொள்கை முடிவா?
அரசின் கொள்கையை நினைத்தால்…. நெஞ்சு பொறுக்குதில்லையே!
�,”