இந்தியாவின் மிக வயதான பெண்மணி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு அனைவருக்கும் முன்மாதிரியாகத் திகழ்கிறார்.
இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் மார்ச் 1ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஜனாதிபதி, பிரதமர், பல்வேறு மாநில முதல்வர்கள், தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 2,43,67,906 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ள நிலையில் பிரபல நடிகர் மோகன்லால் கொரோனா தடுப்பூசியை அம்ரிதா மருத்துவமனையில் இன்று செலுத்திக்கொண்டார். இந்திய அரசுக்கும் தடுப்பூசியைத் தயாரித்துள்ள நிறுவனங்களுக்கும் மருத்துவர்களுக்கும் மோகன் லால் நன்றி தெரிவித்துள்ளார்.
இதனிடையே இந்தியாவில் மிக வயதான பெண்மணியான கர்நாடகத்தைச் சேர்ந்தவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. ஜே. காமேஷ்வரி(103 ) என்பவர்தான் இந்தியாவின் மிக வயதான பெண்மணி என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். இவர் நேற்று இங்குள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
ஏற்கனவே இந்தியாவில் மிக வயதானவராக அறியப்படும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் 102 வயது சுப்ரமணியன், கொலம்பியா ஆசிய மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில், காமேஷ்வரி நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
காமேஷ்வரியுடன், அவரது 77 வயது மகன் பிரசாத் ராவ் மற்றும் தனது குடும்பத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளத் தகுதி வாய்ந்தவர்களுடன் மருத்துவமனைக்கு வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டார். அனைவரும், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு சுமார் அரைமணி நேரம் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டு பிறகு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கொரோனா பேரிடர் காலத்தில், தாமாக முன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்ட காமேஷ்வரி மற்றும் அவரது குடும்பத்தினரை மருத்துவமனை நிர்வாகத்தினர் பாராட்டினர்.
மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வந்தாலும் இந்தியாவில் கொரோனா மீண்டும் கடந்த சில நாட்களாக அதிகம் பரவிவருகிறது. இன்று (மார்ச் 10) இந்தியாவில் மேலும் 17,921 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையின், “கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 17,921 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,12,62,707 ஆக அதிகரித்துள்ளது. நோய்த் தொற்றிலிருந்து இன்று 20,652 பேர் குணமடைந்தனர். இதுவரை 1,09,20,046 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,84,598 போ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பால் மேலும் 133 போ் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,58,063 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 2,43,67,906 பேருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-சக்தி பரமசிவன்
�,”