cரஃபேல் விலை: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Published On:

| By Balaji

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான விலைபட்டியல் மற்றும் அதன் திறன் குறித்த விவரங்களை சீலிடப்பட்ட கவரில் 10 நாட்களுக்குள் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரஃபேல் போர் விமானம் வாங்க பிரான்சுடன் இந்தியா ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ரஃபேல் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில், ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா மற்றும் வினீத் தண்டா ஆகியோர், ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாகவும், எனவே அது தொடர்பான விவரங்களை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தனர்.

இந்த மனுவைக் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘மத்திய அரசு, ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அப்படி சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களில், விமானத்தின் விலை குறித்த விவரங்களை அளிக்க வேண்டாம்’ என்று கூறியது.

இதற்கிடையே, ரஃபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தில் நடந்துள்ள ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கேட்டு முன்னாள் பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அதில், ரஃபேல் விவகாரத்தில் நாட்டின் உயர்ந்த மதிப்புமிக்க அரசு அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் ஊழல் செய்துள்ளதற்கு போதுமான அளவு முகாந்திரங்கள் உள்ளன.. இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக் கோரி அக்டோபர் 4ஆம் தேதி சிபிஐயில் மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் புகார் தொடபார்க சிபிஐக்கு மத்திய அரசு சார்பில் அழுத்தம் தரப்படுவதாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. எனவே உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் நடந்துள்ள ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில் ரஃபேல் தொடர்பான மனுக்களை இன்று (அக்டோபர் 31) விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, ரஃபேல் விமானத்தின் விலை மற்றும் அதன் திறன் குறித்த விவரங்களை 10 நாட்களுக்குள் சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கின் விசாரணையை நவம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்த வழக்கின் போது, “விரைவில் தேர்தல் வரவுள்ள நிலையில், அரசியல் காரணங்களுக்காக ரஃபேல் ஒப்பந்தம் குறித்து குற்றம்சாட்டப்படுகிறது. இந்த விவகாரத்தில் தேசிய பாதுகாப்பு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்று மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share