மெர்சல் திரைப்படம் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளாவிலும் வசூல் சாதனைசெய்து வரும் நிலையில் கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்துவருகிறது.
தீபாவளி அன்று வெளியன மெர்சல் திரைப்படம் பெங்களூரு மல்லேஸ்வரம் ஸ்ரீ ராதாகிருஷ்ணா திரையரங்கில் திரையிடப்பட்டது. இதற்குக் கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து பட பேனரைக் கிழித்தனர். விஜய்யை வாழ்த்தித் தமிழில் எழுதப்பட்டிருந்த வாசகங்களையும் அழித்தனர். இதனால் விஜய் ரசிகர்களுக்கும், கன்னட அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலைத் தொடர்ந்து அந்த திரையரங்கில் மெர்சல் படம் திரையிடுவது நிறுத்தப்பட்டது. கர்நாடக காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மோதலைக் கட்டுப்படுத்தினார்கள். இதேபோல மைசூரில் உள்ள ஒரு திரையரங்கிலும் மெர்சல் படத்தைத் திரையிடக் கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அங்கும் படம் திரையிடுவது நிறுத்தப்பட்டது.
ஆந்திராவிலும் தெலங்கானாவிலும் மெர்சல் படம் வெளியாகவில்லை. தமிழில் விலங்குகள் நல வாரியச் சான்று மற்றும் தணிக்கைச் சான்று பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதால் இறுதிக் கட்டத்தில் படம் வெளியாகுமா, ஆகாதா என்ற ஐயம் நிலவியது. அந்தச் சிக்கல் அனைத்தும் தீர்ந்து, ஆங்கில சப்-டைட்டில் சேர்ப்பு, மற்றும் இறுதிக் கட்டப் பணிகளை முடித்து தீபாவளி அன்று படம் வெளியிடப்பட்டது. ஆனால் தெலுங்கிற்கான தணிக்கைப் பணிகள் முடிவடையாத காரணத்தால் தெலுங்கில் மொழி மாற்றம் செய்து ‘அதிரந்தி’ என்ற பெயரில் இப்படத்தைத் திட்டமிட்டப்படி வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. விரைவில் அப்பணிகள் முடிக்கப்பட்டு வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும் என்று படக் குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.�,