புதைவிட கேபிள் திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளியை விடும் நடைமுறையைச் செயல்படுத்தாத காரணத்தினால் மின் வாரிய அதிகாரி ஒருவர் பணிமாற்றம் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு மின்தொடரமைப்புக் கழகமானது 2009ஆம் ஆண்டு முதல் தாமிர மின்கடத்தியுடன் கூடிய புதைவிட கேபிள் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 400 கிலோவாட் மற்றும் 2,500 சதுர மி.மீ. எனாமல் பூசப்பட்ட கம்பிகள் இதில் பயன்படுத்தப்படுமென்று அறிவிக்கப்பட்டிருந்தது. 2017ஆம் ஆண்டு இதற்கான ஒப்பந்தப்புள்ளி தகுதித் தேவைகள் மாற்றி வடிவமைக்கப்பட்டன. இதையடுத்து, 1,200 கோடி ரூபாய் புதைவிட கேபிள் திட்டத்தை எந்தவித முன்னனுபவமும் இல்லாத கேஇஐ எனும் டெல்லி நிறுவனத்துக்கு வழங்க முயற்சிகள் நடைபெறுவதாகத் தகவல் வெளியானது. இதற்குக் காரணம் என்னவென்றும், தமிழக ஆட்சியாளர்களும் மின்சார வாரியமும் இம்முயற்சிகளை மேற்கொள்வதற்கான பின்னணி என்னவென்றும், ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்க முயன்ற நிறுவனங்களின் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இது பற்றி, மார்ச் 6ஆம் தேதியன்று மின்னம்பலம் காலை பதிப்பில் [செய்தி](https://minnambalam.com/k/2019/03/06/23) வெளியிடப்பட்டது. இதற்கான ஒப்பந்தப்புள்ளியை விடுவதற்கான தேதி பலமுறை தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 5ஆம் தேதியன்று இந்த புதைவிட கேபிள் திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளியை விடுவதற்கான வாய்மொழி உத்தரவை தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி பிறப்பித்ததாகக் கூறப்படுகிறது. “ஆனால், அது நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து, ஒப்பந்தப்புள்ளியை விடும் பணியில் பொறுப்பில் இருந்த தமிழக மின்சாரத் துறையின் ட்ரான்ஸ்மிஷன் பிரிவு தலைமைப் பொறியாளர் எழினி என்பவர் பணி மாற்றம் செய்யப்பட்டார். அமைச்சரின் உத்தரவு நிறைவேற்றப்படாத நிலையில், அந்த பணிமாற்றம் நடந்துள்ளது” என்று தெரிவிக்கிறது மின் வாரிய வட்டாரம்.
இதனால் புதைவிட கேபிள் திட்டத்தில் கேஇஐ எனும் புதிய நிறுவனத்துக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் குறித்த கேள்விகள் வலுவாகியுள்ளன.
�,”