சென்னையில் ’ரேபிடோ’ பைக் ஷேரிங் வசதியைப் பயன்படுத்த வேண்டாம் என்று போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ள நிலையில் அதை எதிர்த்து மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் அந்நிறுவனம் முறையீடு செய்துள்ளது.
அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல், பெட்ரோல் – டீசல் விலையேற்றம் போன்ற காரணங்களால் சென்னை வாசிகள் ஓலா, உபேர் உள்ளிட்ட டாக்ஸி சேவையை அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். டாக்ஸி சேவையைத் தொடர்ந்து பைக் ஷேரிங் சேவையும் சென்னையில் உதயமானது. ரேபிடோ என்ற மொபைல் செயலியின் வாயிலாக முன்பதிவு செய்தால் நாம் செல்ல வேண்டிய இடத்துக்கே இருசக்கர வாகனத்தில் வந்து இறக்கிவிடும் வசதி இச்செயலில் உள்ளதால் இது அதிக வரவேற்பைப் பெற்றது. ஆனால், தனிநபர் பயன்பாட்டுக்கான இருசக்கர வாகனங்களை வணிக ரீதியாகப் பயன்படுத்துவதாகவும், இதைத் தடை செய்ய வேண்டும் எனவும் புகார்கள் எழுந்தன. ஆட்டோ ஓட்டுநர்களும் இதனால் தங்களது தொழில் பாதிக்கப்படுவதாகப் புகார் கூறினர்.
இதையடுத்து ரேபிடோ செயலியைப் பயன்படுத்த வேண்டாம் என்று போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியது. மேலும், ரேபிடோ செயலி வாயிலாக பைக் ஷேரிங் சேவை வழங்கிய 37 இருசக்கர வாகனங்களைப் போக்குவரத்து துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ரேபிடோ செயலியை கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஸ்டோர் போன்ற தளங்களில் இருந்து நீக்க வேண்டும் எனவும் புகார்கள் எழுந்துள்ளன. பைக் ஷேரிங் பயணத்தில் விபத்தானால் காப்பீடு பெறுவது கடினம் எனவும் போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது. சைபர் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் இந்த ரேபிடோ செயலியில் இருப்பதாக சென்னை காவல் ஆணையர் தரப்பிலிருந்து கூகுள், ஆப்பிள், இந்திய கணினி அவசரகாலக் குழு ஆகியவற்றுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் பைக் ஷேரிங் சேவை வழங்கும் ரோப்பென் டிரான்ஸ்பொர்டேசன் சர்வைசஸ் பிரைவேட் லிமிடெட் என்ற இந்த பைக் ஷேரிங் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது. தெலங்கானாவைச் சேர்ந்த இந்நிறுவனம், தனது முறையீட்டில் சென்னை காவல் ஆணையரின் நடவடிக்கையால் நாடு முழுவதும் உள்ள தனது 3.4 லட்சம் பயனாளர்கள் பாதிக்கப்படுவதாகவும், தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது. பைக் பயணத்துக்கு உரிமம் பெறுவதற்கான எவ்வித விதிமுறையும் இல்லை எனவும், தனியார் பைக் உரிமையாளர்களுக்கும் பயணிகளுக்கும் ஒரு பாலமாக மட்டுமே செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளது. ஜூலை 17ஆம் தேதி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்னர் விசாரணைக்கு வந்த இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே, சொந்த பயன்பாட்டிற்கு வாங்கிய இருசக்கர வாகனங்களில் கட்டணம் வாங்கிக்கொண்டு பயன்படுத்துவதாகக் கூறி கோவை ஆட்டோ ஒட்டுநர்கள் ரேபிடோ நிறுவனத்தின் 4 இருசக்கர வாகனங்களைப் பிடித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர்.
**
மேலும் படிக்க
**
**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**
**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**
**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**
**[டிஜிட்டல் திண்ணை: கிராம சபைகளைக் குறிவைக்கும் சூர்யா](https://minnambalam.com/k/2019/07/17/80)**
**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**
�,”