புல்வாமா தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் உள்பட 3 தீவிரவாதிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து எக்னாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 14ஆம் தேதியன்று காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து, இந்திய-பாகிஸ்தான் எல்லையோரப் பகுதிகளில் பதற்றம் நிலவிவருகிறது.
இந்நிலையில், புல்வாமா மாவட்டத்தில் ட்ரால் என்ற பகுதியில் பிங்கிலிஷ் என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது. ராணுவம், சிஆர்பிஎஃப் மற்றும் காஷ்மீர் மாநிலக் காவல் துறையினர் இணைந்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். ஆபரேஷன் பிங்கிலிஷ்” என்று பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையின்போது, இரு தரப்பினருக்குமிடையே விடிய விடிய துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில், புல்வாமா தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி முத்சார் அகமது கான் உள்பட 3 தீவிரவாதிகளை சிஆர்பிஎஃப் வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.
தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை இன்று (மார்ச் 11) காலை வரை நீடித்தது. இதில், அவர்களிடமிருந்த ஏகே47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதில் கொல்லப்பட்ட முத்சார் அகமது கான் புல்வாமா தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம், வெடிபொருளை ஏற்பாடு செய்தவர் எனக் கூறப்படுகிறது. மற்றொருவர் வெளிநாட்டைச் சேர்ந்த தீவிரவாதி என்று கூறப்படுகிறது. கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் அடையாளத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சி நடைபெற்றுவருகிறது.
**தீவிரவாதி குறித்த விவரம்**
இளங்கலை படித்தவர் முத்சார் அகமது கான். இதன்பிறகு, அவர் ஓராண்டு எலெக்ட்ரிசியன் டிப்ளமோ படிப்பை முடித்தார். 2007ஆம் ஆண்டு ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தில் சேர்ந்துள்ளார் கான். பின்பு, காஷ்மீர் பள்ளத்தாக்கின் பயங்கரவாதக் குழுவின் மறுமலர்ச்சிக்கு உதவியதாக நம்பப்படும் நூர் முகம்மது தந்த்ரி மூலம் தீவிரவாதச் செயல்களுக்கு மாற்றப்பட்டுள்ளார் கான். 2017ஆம் ஆண்டு நூர் முகம்மது கொல்லப்பட்ட பிறகு, 2018ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி கான் வீட்டை விட்டு வெளியேறினார். அதிலிருந்து தீவிரவாதச் செயல்களில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டார். புல்வாமா தற்கொலைத் தாக்குதலை நடத்திய அதில் அகமதுவுடன் கான் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
**சென்னையில் ரெட் அலர்ட்**
புல்வாமா பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரை அடுத்து, சென்னை விமான நிலையத்திற்குப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தைச் சுற்றி 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீவிரச் சோதனைக்குப் பிறகே பயணிகள் விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.�,”