cபிரேமலதாவை மன்னிப்போம்: ஜெயக்குமார்

Published On:

| By Balaji

“பிரேமலதா அதிமுக குறித்து பேசியதை மறப்போம், மன்னிப்போம்” என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசியிருந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், திமுகவோடு அதிமுகவையும் விமர்சனம் செய்திருந்தார். கடந்த தேர்தலில் 37 இடங்களில் அதிமுக வெற்றிபெற்றதே அதனால் தமிழ்நாட்டிற்கு கிடைத்த பலன் என்ன? டெல்லிக்கு போனார்கள், வந்தார்கள் அவ்வளவுதான் என்று கூறியிருந்தார். மேலும் தேமுதிகவால்தான் அதிமுக ஆட்சி இதுவரை தொடர்வதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சென்னையில் இதுகுறித்து இன்று (மார்ச் 9) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “அவர்களுடைய கட்சியை உயர்த்திப் பிடிப்பதற்கு அவர்கள் என்ன கருத்து வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்றுவரும் நிலையில், இதுபோன்ற கருத்துக்கள் கூறுவதை பிரேமலதா தவிர்த்திருக்கலாம். இதோடு இந்த பிரச்சினையை விட்டுவிடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் 37 எம்.பி.க்களாலும் தமிழகத்திற்குப் பயனில்லை என பிரேமலதா விமர்சித்திருக்கிறாரே என்ற கேள்விக்கு, “37 எம்.பிக்கள் இருந்ததால் தான் மேகதாட்டு விவகாரத்தில் பலமாக குரல் எழுப்பி, நாடாளுமன்றத்தையே ஸ்தம்பிக்க வைத்தோம். 37 எம்.பி.க்கள் இல்லையென்றால் இது நடந்திருக்குமா? இதுகுறித்து அவரின் கருத்தை முழுமையாக மறுக்கிறோம். கூட்டணியில் பங்கு பெற்றால் தான் மாநில உரிமைகள் பாதுகாக்கப்படும் என்பதில்லை. கூட்டணியில் இல்லையென்றாலும் மாநிலத்தின் உரிமையை நாம் விட்டுக்கொடுத்ததில்லை. மாநில உரிமைகளுக்காக பலமுறை போராடியிருக்கிறோம். இந்த விஷயத்தில், பிரேமலதா சொல்வதை மன்னிப்போம், மறப்போம்” என்று பதிலளித்தார்.

பிரேமலதா பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசியதை தவிர்த்திருக்கலாம் என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார், “கூட்டணி குறித்து தேமுதிக தான் முடிவெடுக்க வேண்டும். ஓரிரு நாளில் நல்ல முடிவு எட்டப்படும்” என்று தெரிவித்துள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share