இந்துக்கள் மனதை புண்படுத்தும்விதமாகப் பேசியதாக பெங்களூரு குற்றவியல் நீதிமன்றத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கிரண் என்பவர் கடந்த மே மாதம் 8ஆம் தேதி, கர்நாடக மாநிலம் ஹனுமந்த நகர் காவல் நிலையத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் மீது புகார் அளித்தார். அந்தப் புகாரில், கர்நாடக மாநிலத்தின் விஜயபுரா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பசு குறித்து மோசமாக விமர்சித்ததாகவும், பல இடங்களில் தொடர்ந்து இந்துக்கள் மனதைப் புண்படுத்தும் விதமாகப் பேசி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், இந்தப் புகார் குறித்து காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், பிரகாஷ் ராஜ் மீது கிரிமினல் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் வழக்கறிஞர் கிரண். இதனையடுத்து இந்திய தண்டனை சட்டம் 295(A) பிரிவின்கீழ் நடிகர் பிரகாஷ் ராஜ் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்திடம் முறையிட்டுள்ளார்.
பிரகாஷ் ராஜ் சமீபத்தில் கோயம்புத்தூரில் நடைபெற்ற தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் புகழஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசும்போதுகூட, “ஒரே நாடு, ஒரே மதம் என்று மாற்றிவிடத் துடிக்கிற அத்தனை பிரிவினை சக்திகளையும் அவர் எதிர்த்து நின்று நம்மைப் பாதுகாத்திருப்பதை கலைஞர் வெற்றிடமே புரிய வைக்கிறது” என்று நேரடியாக இந்துத்துவா பற்றி பேசியது குறிப்பிடத்தக்கது.�,