அக்டோபர் மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை மந்தமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.
காப்பீட்டுக் கட்டணங்கள், தென் மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் கட்டுக்கடங்காத எரிபொருள் விலையேற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் இந்திய வாகனச் சந்தை சற்று மந்தமான விற்பனையையே கண்டு வருகிறது. முதல் காலாண்டில் வாகன விற்பனை இரட்டிப்பு வளர்ச்சியடைந்திருந்த நிலையில், செப்டம்பர் வரையிலும் விற்பனையில் தொய்வு காணப்படுகிறது. கார் விற்பனையைக் காட்டிலும் பயன்பாட்டு வாகனங்கள் விற்பனைதான் மிகவும் சரிவடைந்துள்ளது.
இந்நிலையில் தீபாவளி, நவராத்திரி உள்ளிட்ட பண்டிகைக் காலங்கள் இந்தியாவில் தொடங்கியதால் கார் விற்பனை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. புதுப்புது மாடல்கள் அறிமுகப்படுத்தியும், சிறப்புச் சலுகைகள் வழங்கியும்கூட அக்டோபர் மாத விற்பனை அடக்கமாகவே இருந்ததாக கார் விற்பனை நிறுவனங்கள் கூறுகின்றன. குறிப்பாக நிசான் நிறுவனம் தங்க நாணயம், ரூ.1 லட்சம் மதிப்பிலான காப்பீடு, பரிமாற்றத்திற்கு ரூ.40,000 வரையிலான போனஸ் உள்ளிட்ட சலுகைகளை வழங்கியது. டட்சன் நிறுவனம் ரூ.52,000 வரையில் சலுகையும், பரிமாற்றத்திற்கு ரூ.15,000 வரையிலான போனஸும் வழங்கியது.
ஆனால் முந்தைய காலாண்டுகளை விட நடப்புக் காலாண்டில் விற்பனை வளர்ச்சி மந்த நிலையிலேயே உள்ளது. 2018-19 நிதியாண்டின் முதல் காலாண்டில் கார் விற்பனை 18 விழுக்காடு வளர்ச்சியுடன் 5.8 லட்சம் வாகனங்கள் விற்பனையாகியிருந்தன. பயன்பாட்டு வாகனங்கள் பிரிவில் 23 விழுக்காடு உயர்வுடன் 2.3 லட்சம் வாகனங்கள் விற்பனையாகியிருந்தன. ஆனால் இரண்டாவது காலாண்டில் கார் விற்பனை 2 விழுக்காடு வீழ்ச்சி கண்டு 5.9 லட்சம் யூனிட்டுகளாகவும், பயன்பாட்டு வாகனங்கள் விற்பனை 8 விழுக்காடு வீழ்ச்சி கண்டு 2.3 லட்சம் யூனிட்டுகளாகவும் உள்ளது. இதையடுத்து பண்டிகைக் கால விற்பனையும் ஏமாற்றம் தருவதாக இருப்பதாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.�,