இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்தியிருந்த ஹர்திக் பாண்டியா, 2ஆவது இன்னிங்ஸின் இறுதி கட்டத்தில் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்து தன் மீதான எதிர்மறை விமர்சனங்களைத் தகர்த்தெறிந்தார். அத்துடன் இந்திய இன்னிங்ஸ் டிக்ளேர் செய்யப்பட்டது.
இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் ட்ரென்ட்பிரிட்ஜ் டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து 161 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா, இரண்டாம் நாள் ஆட்டநேர இறுதி வரை 2 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி 8 ரன்களுடனும், புஜாரா 33 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று (ஆகஸ்ட் 20) தொடங்கியது. தொடர்ந்து ஆடிய புஜாரா, கோலி இருவரும் அரைசதம் கடந்தனர். 208 பந்துகளைச் சந்தித்த புஜாரா 72 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் விராட் கோலி சீரான முறையில் ஆடி டெஸ்ட் அரங்கில் தனது 23ஆவது சதத்தைக் கடந்தார். 103 ரன்கள் எடுத்த கோலி, க்றிஸ் வோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, அஜிங்க்ய ரஹானேவுடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கினார். 7 பவுண்டரி, 1 சிக்ஸருடன் பாண்டியா டெஸ்ட் அரங்கில் தனது 4ஆவது அரை சதத்தைக் கடந்தார். இந்தியா 110 ஓவர்களில் 352 ரன்கள் எடுத்திருந்தபோது கோலி ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து நேற்றைய ஆட்ட நேர இறுதியில் விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் எடுத்திருத்தது. இன்னும் இரண்டு நாட்கள் மீதமிருக்கும் நிலையில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு இன்னும் 498 ரன்கள் தேவைப்படுகின்றன.
சிறப்பான ஃபார்மில் உள்ள ஜானி பேரிஸ்டோவுக்கு நேற்றைய ஆட்டத்தின்போது கைவிரல்களில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் நேற்று களமிறக்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக ஜாஸ் பட்லர் விக்கெட் கீப்பராகச் செயல்பட்டார். பேரிஸ்டோ காயத்திலிருந்து இன்னும் முழுமையாக குணமடையாதது அந்த அணிக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது.
மூன்று நாட்கள் முடிவுற்ற நிலையில், தற்போது ஆடுகளத்தின் தன்மை மாறுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே இன்றைய ஆட்டத்தில் இஷாந்த் ஷர்மா, பும்ரா, முகமது ஷமி ஆகியோரின் பந்துவீச்சு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். கடைசி இரண்டு நாட்களில் ரவிச்சந்திரன் அஸ்வினின் சுழற்பந்து வீச்சும் கைகொடுக்கலாம். இந்த மைதானத்தில் நான்காம் இன்னிங்ஸில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோரே 440தான். 1973ஆம் ஆண்டு இங்கிலாந்து எதிரான டெஸ்ட் போட்டியில் 479 ரன்களை சேஸ் செய்த நியூசிலாந்து, 440 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியிருந்தது.
இந்தப் போட்டியில் இந்தியாவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், அது எத்தனை ரன்கள் வித்தியாசத்தில் என்பது மட்டும்தான் கேள்விக்குறி.�,”