நாடாளுமன்றத் தேர்தலில் அரசியல் காரணங்களுக்காக ட்விட்டர் தலையிடக் கூடாது என்று தகவல் தொழில்நுட்பங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு அறிவுறுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் குடிமக்கள் பாதுகாப்பு உரிமைகள் தொடர்பாக ஆலோசிக்க நாடாளுமன்ற நிலைக் குழுவில் ஆஜராகுமாறு ட்விட்டர் நிர்வாகத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. பிப்ரவரி 11ஆம் தேதியே ஆஜராகும்படி நிலைக்குழு கேட்டுக்கொண்டும் அன்றைய தேதியில் ட்விட்டர் நிறுவனத்தின் சார்பில் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து 25ஆம் தேதி (இன்று) ஆஜராகும்படி மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.
ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேக் டோர்சேவுக்குப் பதிலாக பொதுக் கொள்கைப் பிரிவு சர்வதேசத் துணைத் தலைவர் கோலின் குரோவெல் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார் என்று அந்நிறுவனம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி கோலின் குரோவெல் இன்று நாடாளுமன்ற நிலைக் குழு முன் ஆஜரானார்.
நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான அனுராக் தாகூர் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் நடந்த இக்கூட்டத்தில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் மக்களவைத் தேர்தல் நடைபெற ட்விட்டர் நிறுவனம் ஆதரவளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தேர்தல் தொடர்பாக உள்நோக்கத்துடன், எந்தவிதமான அரசியல் தலையீடுகளையும் ட்விட்டர் மேற்கொள்ளவில்லை என்பதை அதன் நிர்வாகிகள் உறுதிப்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதோடு, தேர்தல் ஆணைய அதிகாரிகளை ட்விட்டர் நிர்வாகி சந்திக்கும்படியும் அனுராக் தாகூர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தக் கூட்டத்தில் கோலின் குரோவெல் பதிலளிக்காத கேள்விகளுக்கு 10 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ட்விட்டர் நிறுவனத்துடனான ஆலோசனைக் கூட்டம் இன்று முடிந்துள்ள நிலையில் மார்ச் 6ஆம் தேதி ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டகிராம் ஆகிய சமூக ஊடகங்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை நாடாளுமன்ற நிலைக் குழு நடத்துகிறது.�,