விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1ஆம் தேதி அரியலூர் மாவட்டம் குழுமூரில் மாணவி அனிதாவின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டு பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தார். தொடர் பயணத்தால் அங்கு அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து திண்டிவனத்தில் சிகிச்சை பெற்ற திருமாவளவன், நேற்றிரவு சென்னை திரும்பினார்.
அவருக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, இன்று (செப்டம்பர் 3) காலை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர். ஒவ்வாமை, உடல் சோர்வு காரணமாக சிகிச்சை பெற்றுவருகிறார் என்றும், மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசிக சமூக ஊடகத்தின் மாநிலச் செயலாளர் சஜன் பராஜ் தனது முகநூல் பக்கத்தில், “தலைவர் நலமுடன் இருக்கிறார். தொடர் பயணங்களால் உடல் ஒவ்வாமை காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சாதாரண மருத்துவ பரிசோதனைதான். ஓய்வு எடுத்தால் மட்டும் போதும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். அதனால் ஐந்தாம் தேதி வரை தலைவரின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன. தலைவர் ஒய்வெடுக்கட்டும். தேவையற்ற வதந்திகளை முகநூலில் பரப்ப வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த ஜூலை மாதம் பெங்களூருவிலுள்ள இயற்கை மருத்துவமனை ஒன்றில்10 நாட்களுக்கு மேல் தங்கிய திருமாவளவன், அங்கு உடல் ரீதியான சில பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெற்றார்.�,”