திமுகவுக்கும் பாஜகவுக்கும் பங்காளி சண்டை இல்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நீட், மாநில உரிமைகள் பறிக்கப்படுவது என பல்வேறு விவகாரங்களில் மத்திய பாஜக அரசை திமுக கடுமையாக விமர்சித்து வருகிறது. அதேபோல அதிமுகவை அதிகமாக விமர்சிக்காத பாஜகவினர், திமுகவின் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை சுமத்திவருகின்றனர். கடந்த ஜனவரியில் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு பேட்டியளித்த திமுக தலைவர் ஸ்டாலின், “பாஜகவுடன் எக்காலத்திலும் கூட்டணி கிடையாது” என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இரு கட்சிகளும் ஒன்றையொன்று விமர்சிக்கும் போக்கு தொடர்ந்துவருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவிலிருந்து பிரிந்து தமிழகத்தில் இணைந்து 62 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மொழிப்போர் தியாகி மார்ஷல் நேசமணி மண்டபத்தில் அவரது சிலைக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று (நவம்பர் 1) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணனிடம், திமுகவை பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டிவருகின்றனரே என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “திமுகவுக்கும் எங்களுக்கும் என்ன பங்காளி சண்டையா?. பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக திமுகவையும், அதிமுகவையும் விமர்சனம் செய்துவருகிறோம். இது அரசியலுக்காக அல்ல, தமிழகம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். நடந்த தவறுகளுக்கு திருத்தம் கொண்டுவரக் கூடிய வகையில்தான் நாங்கள் விமர்சித்து வருகிறோம்” என்று பதிலளித்தார்.
20 தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தமிழக பாஜக முடிவு செய்யும் என்று தெரிவித்த அவர், டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.�,