தெலுங்கில் தயாராகும் ‘ஆயுஷ்மான் பவா’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஆண்ட்ரியா ஒப்பந்தமாகியுள்ளார்.
கடந்த ஆண்டு வெளியான அவள் திரைப்படத்தை தொடர்ந்து ஆண்ட்ரியா நடிப்பில் வேறு எந்தப் படமும் வெளியாகவில்லை. இருப்பினும் தமிழில் அவர் நடித்த இரு முக்கியமான படங்கள் இந்த ஆண்டு வெளியாகவுள்ளன.
கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த பூஜா குமாருக்கு இணையாக ஆண்ட்ரியாவுக்கும் வலுவான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு வெளியாகவுள்ள விஸ்வரூபம் 2 படத்தில் முதல் பாகத்தை விட அதிகக் காட்சிகளில் நடித்துள்ளார். அந்தப் படத்தில் நாட்டியம் ஆடிய ஆண்ட்ரியா இந்தப் படத்தில் ராணுவ உடையில் வலம் வருகிறார். இது தவிர வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வட சென்னை படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தெலுங்கில் சரண் தேஜ் இயக்கி கதாநாயகனாக நடிக்கும் படம் ‘ஆயுஷ்மான் பவா’. ஸ்னேகா உல்லுல் கதாநாயகியாக நடிக்கிறார். இதில் ஜெனிபர் என்ற பாப் சிங்கர் கதாபாத்திரத்தில் நடிக்க ஆண்ட்ரியா ஒப்பந்தமாகியுள்ளார். தசரதி சிவேந்திரா ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார். கோபால கிருஷ்ண பருச்சுரி, வெங்கடேஸ்வரராவ் பருச்சுரி இணைந்து திரைக்கதை அமைத்துள்ளனர். விரைவில் தொடங்கவுள்ள படப்பிடிப்பில் ஆண்ட்ரியா இணையவுள்ளார்.
இது தவிர பாலாஜி குமார் இயக்கும் ‘சொல்லாதே யாரும் கேட்டால்’ என்ற த்ரில்லர் படத்திலும் ஆண்ட்ரியா நடித்துவருகிறார். இதில் அவரோடு பிரசன்னா, மடோனா ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.�,