தீ பாதுகாப்பு விதிமுறைகள் புறக்கணிக்கப்பட்டதாலே டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டதாகப் புகார் எழுந்தது. இதில் 17 பேர் உயிரிழந்தனர்.
இதேபோல, சென்னையில் தங்களை ஆக்கிரமித்துள்ளவர்களை ஒவ்வொரு நாளும் பயத்திலேயே வைத்திருக்கின்றன 2,684 கட்டடங்கள். இந்த கட்டடங்களில் எப்போது அசம்பாவிதம் நடக்கும் என்று சொல்ல முடியாது. வணிக வளாகங்கள், ஹோட்டல்கள் போன்றவை என்ஓசி சான்றிதழ் மற்றும் தீ தடுப்பு பாதுகாப்பு சேவையிடம் இருந்து உரிமம் பெறாமலேயே செயல்பட்டு வருகின்றன. இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இது மாதிரியான கட்டடங்களின் பட்டியலை சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் வெளியிட்டு வந்தாலும், அதன் மீது எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் அளித்த தகவல்படி, சென்னையின் உள்பகுதி மற்றும் சுற்றுப்புறத்தில் இருக்கும் 2,439 கட்டடங்கள் தடையில்லாச் சான்றிதழ் மற்றும் தீயணைப்பு மீட்பு சேவையின் உரிமம் பெறாமல் இயங்குகின்றன. தீ தடுப்பு அம்சங்கள் இடம்பெறாத 245 கட்டடங்களைச் சீரமைக்கும் கோரிக்கையை சிஎம்டிஏ நிராகரித்துள்ளது. இந்த கட்டடங்கள் அனைத்தும் 1999-2003 காலங்களில் கட்டப்பட்டவை. தடையில்லாச் சான்றிதழ், தீயணைப்பு பாதுகாப்பு சேவையிடமிருந்து உரிமம் பெறுவதற்கு 30 நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும்.
இது குறித்து சிஎம்டிஏ அதிகாரி ஒருவர் கூறுகையில், “குறிப்பிட்ட தளங்கள் மட்டும் கட்டுவதாக அனுமதி பெற்றுவிட்டு மேலும் சில தளங்களைக் கட்டுகின்றனர். இந்த கட்டடங்கள் ஒழுங்குபடுத்துதலுக்கு உரிமை கோர முடியும். ஆனால், இந்த கட்டடங்களுக்குத் தடையில்லாச் சான்றிதழும் உரிமமும் பெற முடியாது. தடையில்லாச் சான்றிதழ் இல்லையென்றால், சீரமைக்கும் கோரிக்கையை வைக்க முடியாது” என தெரிவித்தார்.
பாதுகாப்பற்ற கட்டடங்களின் பட்டியல் குறித்து 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சிஎம்டிஏ ஒரு அறிவிப்பு வெளியிட்டது. 10 ஹோட்டல்கள் பாதுகாப்பற்றது என்றும், ஐந்து கட்டடங்கள் தியாகராய நகருக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கின்றன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தியாகராய நகர் குடியிருப்பு நலச் சங்கத்தின் செயலர் கண்ணன் கூறுகையில், “2016ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் தீ தடுப்பு பாதுகாப்பு அம்சங்கள் அடங்கிய பலகைகளை கடைக்கு முன்பாக வைக்க வேண்டுமென்று வழிகாட்டியது. அதன்படி, ஆரம்பத்தில் கண்ணில் தென்பட்ட பலகைகள், சில நாட்களில் மறைந்துவிட்டன. ஒவ்வொரு ஆண்டும் வணிக வளாகங்கள் தீ பாதுகாப்பு சோதனை செய்ய வேண்டும். ஆனால், அது போன்ற நடவடிக்கைகளை தியாகராயநகரில் பார்க்கவில்லை” என்று தெரிவித்தார்.�,