சேது ராமலிங்கம்
உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ஒரு முக்கியமான தீர்ப்பை அளித்துள்ளது. அந்தத் தீர்ப்பில் பெண் ஒருவர் தனக்கு விருப்பமில்லை என்பதைக் குறிக்கும் விதமாக நோ என்று தெரிவித்தால் அதற்கு அர்த்தம் நோதான் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கடந்த 30 ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் பெண் நீதிபதிகளான ஆர்.பானுமதி மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோர் கொண்ட அமர்வு பாலியல் வல்லுறவு தொடர்பான தீர்ப்பில் இவ்வாறு கூறியிருந்தது.
டெல்லி எதிர் பங்கராஜ் சௌத்ரி மற்றும் பிறர் என்ற வழக்கில் ஒரு பாலியல் தொழிலாளியை நால்வர் கொண்ட கும்பல் ஒன்று பாலியல் வல்லுறவுக்குள்ளாகியது. இந்தச் சம்பவம் அந்தப் பாலியல் தொழிலாளி விபச்சாரத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டபோது நடந்துள்ளது. வழக்கை விசாரித்த டெல்லி குற்றவியல் நீதிமன்றம் குற்றவாளிகள் நால்வருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அளித்துத் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் நால்வரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.
அந்த முறையீடு வழக்கில் பாதிக்கப்பட்டவர் ஏற்கனவே ஒரு பாலியல் தொழிலாளி என்றும் விபச்சாரக் குற்றத்தில் ஈடுபட்டதற்காகத்தான் அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். எனவே இது வல்லுறவு ஆகாது என்று கூறியிருந்தார். இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம் அந்த நால்வரையும் விடுதலை செய்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
**பெண் யாராக இருந்தாலும்…**
வழக்கின் விசாரணையானது ஆர்.பானுமதி மற்றும் இந்திரா பானர்ஜி ஆகிய பெண் நீதிபதிகளை மட்டுமே கொண்ட அமர்வின் முன்பாக விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில் ஒரு பெண் அவள் எப்படிப்பட்டவராக இருந்தாலும், அவள் பாலியல் தொழிலில் ஈடுபடுபவராக இருந்தாலும், அவளுக்கு விருப்பம் இல்லாவிட்டால் அவள் நோ சொல்லி விட்டால் அது நோதான். எனவே பாதிக்கப்பட்ட பெண் கும்பல் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதற்கான வலிமையான ஆதாரங்கள் உள்ளதால் குற்றவியல் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்கிறோம். அதன்படி குற்றவாளிகள் நான்கு பேருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை அளிக்கிறோம். விபச்சாரத்தில் ஈடுபட்டதாலேயே பாலியல் வல்லுறவுக்குச் சம்மதம் தெரிவித்துவிட்டதாகக் கருதிக் குற்றவாளிகளுக்கு விடுதலை அளித்துத் தீர்ப்பளித்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிராகரிக்கிறோம் என்று தெரிவித்தனர்.
இந்தத் தீர்ப்பானது ஆண் நீதிபதிகளுக்கும் பெண் நீதிபதிகளுக்கு உள்ள வேறுபாட்டைச் சுட்டிக்காட்டுவதாக பெண்ணியவாதிகள் புகழ்ந்துள்ளனர்.
**பிங்க் திரைப்படம்**
இது தொடர்பாக ஓர் அருமையான திரைப்படம் நினைவுக்கு வருகிறது. 2016 செப்டம்பரில் ‘பிங்க்’ என்ற இந்திப் படம் வெளியானது. ஒரு பெண் நோ (வேண்டாம்) என்றால் நோதான், அதற்கு எஸ் என்று அர்த்தமல்ல என்ற கருத்தை இந்தப் படம் நெற்றிப் பொட்டில் அடித்ததுபோல் பார்வையாளர்களுக்கு உணர்த்தியது. நாடு முழுவதும் சமூக ஆர்வலர்களாலும் திரைப்பட விமர்சகர்களாலும் பெரிதும் பேசப்பட்ட இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் மூத்த வழக்கறிஞராக நடித்தார். தப்ஸி பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவராக நடித்திருந்தார்.
வெவ்வேறு துறைகளில் பணியாற்றும் மூன்று பெண்கள் இரவு நேர பார்ட்டிக்குச் செல்கிறார்கள். அங்கு வரும் அமைச்சரின் மகன் இவர்களின் நண்பன். இவர்கள் சோஷியலாக பழகுவதை அவன் தவறாக நினைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபடுகிறான். இவர்கள் அவனைத் தவிர்க்க எவ்வளவோ முயற்சி செய்தும் அவன் விடுவதாக இல்லை. அவனுடைய பலவந்தம் அதிகமாகும்போது ஒரு கட்டத்தில் அவன் தலையில் மது பாட்டிலால் தாக்கிவிட்டுத் தப்பிவிடுகின்றனர்.
அமைச்சர் மகன் என்பதால் இவர்கள் மீது வழக்கு தொடரப்படுகிறது. அத்துடன் இவர்கள் தங்கியிருக்கும் வீடு தொடங்கி, பணியிடம், வெளியிடம் உட்பட எல்லா இடங்களிலும் தொல்லைகள் அளிக்கப்படுகின்றன. ஒதுங்கிப்போகலாம் என்று நினைத்த பெண்கள் மீது வழக்கு போடப்படுவதால் அவர்களும் பதிலுக்கு வழக்கு போடுகிறார்கள்.
பாதிக்கப்பட்ட பெண்களை சங்கடத்துக்கு உள்ளாக்கும் பாலுறவு தொடர்பான கேள்விகளையும் குறுக்கு விசாரணைகளையும் நீதிமன்றத்தில் அந்தப் பெண்கள் துணிச்சலாக எதிர்கொள்கின்றனர். மூத்த வழக்கறிஞரான அமிதாப் தன் இறுதி வாதத்தில் ஒரு பெண் எந்தச் சூழ்நிலையிலும் நோ (வேண்டாம்) என்று கூறினால் அதற்கு நோ என்றுதான் அர்த்தம்; எஸ் என்று அர்த்தமல்ல என்று ஆணித்தரமாக வாதங்களை எடுத்து வைப்பார்.
படம் வந்து இரண்டு ஆண்டுகளாகி விட்டன. ஆனால், இந்த அடிப்படை உண்மையை ஆணாதிக்கத்தில் ஊறிப்போன சமுதாயம் இன்னமும் வேறு மாதிரி அர்த்தப்படுத்தி வருகிறது. ‘பெண்ணின் மனது ஆழமானது; புரிந்துகொள்ள முடியாதது’ என்ற வார்த்தைகளை ஆட்டோவிலும் தேநீர்க் கடைகளிலும் சாதாரணமாகப் பார்க்கலாம். ‘பெண் மனசு ஆழமுன்னு ஆம்பளைக்குத் தெரியும்’ என்ற பாடலையும் நாம் ரசிக்கிறோம். நமது திரைப்படக் கதாநாயகர்கள் பெண் வேண்டாம் என்றால் வேண்டும் என்று அர்த்தப்படுத்திவருவது இன்னும் தொடர்கிறது. இது போன்ற பழைமைவாதக் கருத்தையே இன்னமும் பெண்களுக்கான உரிமை மறுப்பின் ஆயுதமாக ஆணாதிக்க சமூகம் பயன்படுத்துகிறது.
ஆண்டாண்டு காலமாகப் புரையோடிப்போன இக்கருத்தியல் பெண்ணின் விருப்பம், விருப்பமின்மை என்ற நியாயமான அடிப்படை மனித உணர்வுகளைப் புரிந்துகொள்ளக்கூட முயற்சிக்காமலே பெண்ணின் மறுப்பு தெரிவிக்கும் உரிமையை வன்மையாக மறுக்கிறது. ஆணின் விருப்பத்தைப் பெண் மேல் திணிப்பதையும் நியாயப்படுத்துகிறது.
**பெண்ணின் தேர்வு மறுப்பு**
இதன் விளைவு, பெண் தன்னுடைய காதலை ஏற்க மறுத்தால் அவள் மீது ஆசிட் ஊற்றுவது (புதுச்சேரியில் வினோதினி தொடங்கி இன்று வரை தொடர்கிறது) வகுப்பறையில் புகுந்து சக மாணவிகள் முன்பாக வெட்டுவது, வீட்டுக்குள்ளேயே புகுந்து பெட்ரோல் ஊற்றிக் கொளுத்துவது எனப் பெண்கள் மீதான கொடூரமான வன்முறைகள் நிற்காமல் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இதில் பெண் ஓர் உடமைப் பொருள்தான்; சக மனுஷியல்ல என்ற ஆதிக்க கருத்தியல்தான் ஆட்சி செய்கிறது.
எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றுவது போலவே பெண்ணின் தேர்வு உரிமையை மறுப்பது எதார்த்தமானது, சர்வசாதாரணமானது என்ற பாணியில்தான் பெண்களை ஊடகங்கள் சித்திரிக்கின்றன. பெண்களை போகப் பொருளாகவும் சதைப் பிண்டங்களாகவும் பாவிக்கும் ஃபிகர், அயிட்டம், சரக்கு , ஃப்ரெஷ் பீஸ், சூப்பர் ஸ்ட்ரக்சர் என்பது போன்ற வார்த்தைகளைச் சமூகம் முழுவதும் பரவலாக்கிவிட்டனர். இதில் என்ன கொடுமை என்றால் நான் நல்ல ஃபிகரா என்று பெண்களையே ஆண்களிடம் கேட்க வைத்ததுதான்.
திரைப்படங்களில் பெண் இழிவு மொழிகளின் தொடர்ச்சியாகவும் சிந்தனையாகவும் ‘ஃபிகர் மடிப்பது’ என்ற பெயரில் பெண்ணை அடக்கிப் பணிய வைப்பது, இணங்கவைப்பது போன்ற காட்சிகள் இடம் பெறுகின்றன. இதில் ஈடுபடாத கதாநாயகர்களே கிடையாது. கல்லூரிக்குச் செல்லும் பெண்கள், வேலைக்குப் போகும் பெண்கள் என எந்தத் துறை சார்ந்த பெண்களாக இருந்தாலும், டாக்டர் (ரெமோ), மாவட்ட ஆட்சி தலைவர் என யாராக இருந்தாலும், விட்டு வைக்க மாட்டார்கள். அவர்களை விடாமல் துரத்தி அவர்கள் எவ்வளவு மறுத்தாலும் இறுதியில் படிய வைக்க நம் ஹீரோக்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். கமல், ரஜினி தொடங்கி விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் என விதிவிலக்கின்றி எல்லா ஹீரோக்களும் இடம் பிடித்து விட்டார்கள்.
பெண்ணைத் துரத்துதல் என்ற மடமையும் (stalking) அவரை துன்புறுத்துதல் (harassment) என்ற கொடுமையும் ஊடகங்களில் இயல்பாக்கப்படும்போது அதைக் காணும் இளம் மனங்களில் எத்தகைய எண்ணம் விதைக்கப்படும்? ஒரு பெண்ணின் வாழ்க்கைத் துணைவரின் தேர்வைக்கூட மறுக்கும் சமூகமும் அதை அன்றாடம் வலியுறுத்தும் சினிமாக்களும் எப்போது மாறும்? பெண்ணை சக மனுஷியாகப் பார்க்கும் ஆரோக்கியமான பாலினக் கண்ணோட்டத்தை எப்படி இன்றைய தலைமுறைக்கு வளர்க்கப் போகிறோம்?�,”