ஏழைப் பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கும் திட்டத்தில் இதுவரையில் 7 கோடிப் பெண்களுக்கு சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்கும் விதமாக *பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா* திட்டம் 2016ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 2020ஆம் ஆண்டுக்குள் 8 கோடிப் பேருக்கு சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. டெல்லியில் மார்ச் 8ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியொன்றில் இத்திட்டத்தின் பயனாளி ஒருவருக்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமையல் எரிவாயு இணைப்பை வழங்கினார். இதன் மூலம் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இணைப்புகளின் எண்ணிக்கை 7 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் தர்மேந்திர பிரதான் பேசுகையில், “சர்வதேச பெண்கள் தினத்தன்று 7 கோடியாவது இணைப்பை நாங்கள் வழங்கியுள்ளோம். இதன் மூலம் எங்களது இலக்கில் 87 சதவிகிதத்தை அடைந்துவிட்டோம். நாங்கள் உறுதியளித்தபடி இணைப்புகளை வழங்கிவருகிறோம். 2016 மே 1ஆம் தேதி தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் 34 மாதங்களுக்குள் இந்த இலக்கை நாம் அடைந்துள்ளோம். இதுவரையில் வழங்கப்பட்ட சமையல் எரிவாயு இணைப்புகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத்தான் 42 சதவிகிதம் அளவு சென்று சேர்ந்துள்ளது. ஆண்டு ஒன்றுக்கு 23 கோடி சிலிண்டர்கள் மீண்டும் நிரப்பப்படுகின்றன. இத்திட்டம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது” என்றார்.�,