இந்திய கிரிக்கெட் அணிக்குத் தலைமை பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கும்ப்ளே தனது ஒரு வருட கால பதவிக்காலம் முடிந்த பின்னர், விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பதவியில் இருந்து விலகினார். கும்ப்ளே 2-வது முறையாகத் தேர்வு செய்யப்படலாம் என்ற நிலை இருந்தது. இதனால் முக்கியமான நபர்கள் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்யவில்லை. சேவாக் மற்றும் டாம் மூடி ஆகியோர் மட்டுமே முக்கியமான நபர்களாகத் திகழ்ந்து வந்தனர்.
இதனால் மேலும் பலரது விண்ணப்பங்களை வரவேற்கும் வகையில் விண்ணப்பத்திற்கான கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது. இதனால் இந்திய அணியின் முன்னாள் வீரரும் 2014 முதல் 2016 வரை தலைமை பயிற்சியாளராகவும் இருந்த ரவி சாஸ்த்ரி இந்தப் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் ரவி சாஸ்திரி அளித்துள்ள பேட்டியில் ** விண்ணப்பிக்கும் கால கெடுவை பிசிசிஐ அதிகரித்துள்ளதால் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்ய முடிவு செய்துள்ளேன் ** என்று தெரிவித்துள்ளார். இதனால் ரவி சாஸ்திரி தலைமை பயிற்சியாளராக அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இருப்பினும் கடந்த சில வருடங்களாக கமெண்ட்ரியில் தனது குரல் வளத்தின் மூலம் அதிக ரசிகர்களை தன்பால் ஈர்த்தவர் ரவி சாஸ்த்ரி. இந்திய அணி 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பையைக் கைப்பற்றும் போது, இந்திய கேப்டன் தோனியின் சிக்ஸரை **Dhoni finishes off in style** என்று கூறி ரசிகர்களின் மகிழ்ச்சியை, ஆரவாரத்தைத் தனது கம்பீர குரலின் மூலம் அதிகரித்தார். ஒருவேளை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்த்ரி தேர்வு செய்யப்படும் பட்சத்தில் அவரின் கமெண்ட்ரியை ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனும் தவறவிடுவான்.�,