கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்குக் கூரை அமைத்துக் கொள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் தார்ப்பாய் வழங்க உத்தரவிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
தலைமைச் செயலகத்தில் இன்று (நவம்பர் 23) கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் முதல்வர் எடப்பாடி தலைமையில் நடைபெற்றது. அதன்பின்னர் பேசிய முதல்வர். கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்குக் கூரை அமைத்துக் கொள்ள தார்ப்பாய் வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடைகள் மூலம் உதவிட வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி தனியார், அரசு சாரா நிறுவனங்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினர் தங்களால் முடிந்த உதவிகளைத் தமிழக அரசின் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு நன்கொடைகள் மூலம் உதவி வருகிறார்கள்.
**முதல்வரிடம் இன்று வழங்கிய நிதி**
கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, தென்னிந்திய சர்க்கரை ஆலை சங்கங்களின் சார்பாக ரூ.1 கோடிக்கான காசோலையை முதல்வரிடம் வழங்கினர்.
முதல்வரின் கஜா புயல் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிதியை இன்று வழங்கியுள்ளார் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள். எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டி.ஆர்.பச்சமுத்து, கஜா புயல் நிவாரண நிதிக்காக ரூ.1 கோடிக்கான காசோலையை முதல்வரிடம் வழங்கினார். ராம்கோ குழும நிறுவனத்தின் தலைவர் பி.ஆர்.வெங்கட்ராமா ராஜா மற்றும் தலைமை செயல் அலுவலர் ஏ.வி.தர்மா கிருஷ்ணன் ஆகியோர், ரூ.1 கோடிக்கான காசோலையை முதல்வரிடம் இன்று வழங்கினர்.
வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் தலைவர் எம்.வி. முத்துராமலிங்கம், ரூ.1 கோடிக்கான காசோலையை முதல்வரிடம் வழங்கினார். மதுரை புறநகர் மாவட்ட அஇஅதிமுக சார்பில், மதுரை புறநகர் மாவட்ட கழகச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான வி.வி.ராஜன் செல்லப்பா, ரூ.10 லட்சத்திற்கான காசோலையை முதல்வரிடம் வழங்கினார்.
**நிவாரணப்பொருட்கள்**
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ஊழியர்கள், மாணவர்கள் அளித்த நிவாரணத்தின் மூலம் ரூ.5 லட்சம் மதிப்பிலான குடிநீர், போர்வை, மெழுகுவர்த்தி, துணிகள், அரிசி, கோதுமை, பருப்பு, பிஸ்கட் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அமமுக கட்சி சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மக்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான நிவாரணப்பொருட்கள் லாரி மூலம் இன்று அனுப்பி வைக்கப்பட்டது.
கடலூர் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் செயலாளர் ஆனந்தபவன் நாராயணன், கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை ஆட்சியர் அன்புசெல்வனிடம் இன்று வழங்கினார்.
�,”