பிக் பாஸ் புகழ் ஓவியா என்று கூறப்பட்டாலும் அவருக்கான அறிமுகமாக அமைந்தது களவாணி திரைப்படம் தான். 9 ஆண்டுகளுக்குப் பின் அதன் இரண்டாம் பாகம் தயாராகிவரும் நிலையில் இன்று (ஏப்ரல் 14) அதன் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்றுவருகிறது.
களவாணி திரைப்படத்தில் சின்னச் சின்ன களவாணித் தனமான வேலைகளில் ஈடுபடும் விமல் தன் காதலி ஓவியாவையும் தனது பாணியிலேயே மணம் முடித்ததுடன் முதல் பாகம் நிறைவுபெறும். இரண்டாம் பாகத்தில் விமல் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கதை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் தொடர்ந்து தள்ளிப்போகும் நிலையில் படத்தில் பிரேக்கிங் நியூஸில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வருவதும் அதன்பின் ஊரே உள்ளாட்சித் தேர்தலில் திருவிழா போல் ஆரவாரமாக கலந்துகொள்வதுமான காட்சிகள் இடம்பெறுகின்றன.
விமல், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக உருவாகியிருந்தது. அதிலிருந்து எந்த வகையில் இந்தப் படம் வேறுபட்டுள்ளது என்பதை படம் வெளியான பின்னரே அறியமுடியும்.
அறிக்கி என்ற அறிவழகன் என்று வலம் வந்த விமல் இந்தப் பாகத்தில் என்டிஆர், எம்ஜிஆர், வரிசையில் ஏஎம்ஆர் என்று அழைக்கப்படுகிறார்.
விமல், ஓவியா ஆகியோருடன் இளவரசு, சரண்யா பொன்வண்ணன், கஞ்சா கருப்பு என முதல் பாகத்தில் நடித்தவர்கள் இந்தப் படத்திலும் தொடர்கிறார்கள். சூரிக்கு பதில் விக்னேஷ்காந்த் இணைந்துள்ளார்.
சற்குணம் இயக்கி தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு மாசானி ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜா முகமது படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். மே மாதம் படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
[களவாணி 2 டிரெய்லர்](https://www.youtube.com/watch?v=sa690ErhlEc)
�,”