cஇளைய நிலா: இது அப்பட்டமான அத்துமீறல்!

Published On:

| By Balaji

இளைஞர்களின் உறவுச் சிக்கல்களைத் தீர்க்க என்ன வழி? பகுதி – 26

ஆசிஃபா

புகைப்படங்கள் வாழ்வின் சில தருணங்களை நமக்காகப் பாதுகாத்து தருபவை. எப்போது பார்த்தாலும், அதை எடுத்த நொடிக்கு நம்மை அழைத்துச் சென்றுவிடும். இப்படியான புகைப்படங்கள் நம் அனைவரது வாழ்விலும் இருக்கும்தானே? ஆனால், அனைத்துப் புகைப்படங்களும் இப்படியான இனிமையான நினைவுகளை மட்டுமே சும்ந்துகொண்டிருக்கின்றனவா?

பொதுவாகவே நான் உடனடியாக யாருடனும் பேசிவிட மாட்டேன். Introvert என்று வைத்துக்கொள்ளலாம். அதுவும், பிறருடைய போன், பேப்பர்ஸ், டைரி போன்றவற்றைத் தொடவே மாட்டேன். தனிப்பட்ட விஷயங்களில் என் கருத்துகளைச் சொல்லவோ, ஆர்வம் காட்டவோ மாட்டேன். ஆனால், சில நண்பர்கள் விரும்பி வந்து தங்களுடைய தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது அதைத் தவிர்க்க முடிவதில்லை. அப்படியான ஒரு சம்பவம்தான் இதுவும்.

நண்பன் ஒருவன் அவன் போனிலுள்ள புகைப்படங்களைக் காண்பித்துக்கொண்டிருந்தான். இதற்கு முன்பு இப்படி போட்டோ காட்டுகிறேன் என்ற பலரும், போனில் இருக்கும் சில பர்சனல் புகைப்படங்களையும் சேர்த்துக் காட்டிவிட்டு முழித்துக்கொண்டிருப்பார்கள். எனவே, அதெல்லாம் வேண்டாம் என்று நான் சொல்லியும் கேட்காமல் காட்டிக்கொண்டிருந்தான். திடீரென்று, அவனும் அவன் காதலியும் (என் ஆண்டு படிக்கும் மாணவிதான்) நெருக்கமாக இருக்கும் ஒரு புகைப்படம் வந்துவிட்டது. அவன் சிறிதும் அசராமல், அதை விளக்கிக்கொண்டிருந்தான். நான் அதிர்ச்சி அடைந்ததைப் பார்த்து, “முதல் தடவ விக்கி பாத்தபோதுதான் ரொம்ப ஒரு மாதிரி ஆய்டுச்சு. அதுக்கு அப்புறம் பழகிடுச்சு!” என்றான். இதைக் கேட்டு என்ன சொல்வது என்று தெரியாமல் நான் விழித்துக்கொண்டிருந்தேன்.

அவன் நண்பர்களில் முக்கால்வாசிப் பேர் அவர்களின் நெருக்கமான புகைப்படங்களைப் பார்த்திருக்கிறார்கள். அப்படியான புகைப்படத்தை எடுக்க அவள் ஒப்புக்கொண்டிருந்தாலும், அதைப் பிறருக்குக் காண்பிக்க வேண்டும் என்பது அவள் எண்ணம் கிடையாது என்பது தெரியவந்தது. இப்படிச் செய்வது தவறு என்று அவனிடம் சொல்லியும் கேட்காமல், என் நட்பை முறித்துக்கொண்டான். அவளிடம் எப்படித் தெரிவிப்பது என்று யோசித்துக்கொண்டிருந்த இரண்டு நாட்களுக்குள் விஷயம் அவளுக்குத் தெரியவரவே, பிரச்சினை ஆரம்பமானது.

கடைசியாக, இருவர் வீடு வரை பிரச்சினை சென்று, அவள் கல்வியை நிறுத்தும் அளவுக்குச் சிக்கலாகி, இருவரும் பிரிந்தனர்.

இங்கு கவனிக்க வேண்டிய விஷயம், நம் நம்பிக்கை உடைக்கப்படுவதுதான். காதல் என்பது, வாழ்க்கையை ஒருவரிடம் ஒருவர் நம்பி ஒப்படைப்பதுதானே? அந்த நம்பிக்கையை உடைக்க எப்படி மனம் வருகிறது என்பதுதான் புதிர்.

தன் வாழ்வின் சிறந்த தருணமாகக் கருதி எடுக்கப்பட்ட அந்தரங்கமான புகைப்படத்தை, பிறரிடம் பகிர்ந்துகொள்வது, அந்த நம்பிக்கையின் அடிப்படையைத் தகர்க்கிறது. அந்தரங்கத்தின் மரியாதையையும் குலைக்கிறது. இப்போதுள்ள டிஜிட்டல் காலத்தில், யார் வேண்டுமென்றாலும் யாருடைய புகைப்படத்தையும் வைத்துக்கொண்டு விளையாடலாம். “பெண்கள் வெட்கப்படக் கூடாது” என்றும், “தைரியமாக இம்மாதிரி பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும்” என்றும் சொன்னாலும், உண்மையில் அது நடக்கிறதா என்பதைச் சிந்திக்க வேண்டும். காலம் காலமாகப் பெண்ணுடல் மீதான கற்பிதங்களையும், சமூகத்தையும் சில ஆண்டுகளில் மாற்றிவிடவே முடியாது. நாம் நினைக்கும் “யாரும் morphingஐக் கண்டு பதறாத” அந்த உலகை உருவாக்கப் பல ஆண்டுகளாகும். அது வரையில் எத்தனை பேர் பாதிக்கப்பட போகிறார்கள்?

அந்தப் படம் தவறாகப் பயன்படுத்தப்படுவதால் வரக்கூடிய அவமானம் ஒருபுறம் இருக்க, அந்தப் பெண்ணின் உரிமை மீறப்படுகிறது என்பது மிக முக்கியமான பிரச்சினை. அவளுடைய விருப்பம் இல்லாமல் ஒரே ஒரு நபரிடம் அதைக் காட்டினாலும் அது உரிமை மீறல்தான். அவளுடைய அந்தரங்கத்தின் மீதான அத்துமீறல்தான். நம்பிக்கைத் துரோகம்தான்.

காதல் என்பது நம் வாழ்வின் அத்தியாவசியமான ஒரு தேவை. அப்படியான காதலை நாம் பல நாட்கள் யோசித்துப் பார்த்துத்தான் தேர்ந்தெடுப்போம். அவர்கள் மீது உலகின் மொத்த நம்பிக்கையையும் வைப்போம். அதை எச்சூழலிலும் உடைத்துவிடக் கூடாது என்பதில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.

நமக்கு மட்டுமே சொந்தமான விஷயங்கள் நமக்கு மட்டும் தெரிந்தவையாக இருந்தால் போதும்!

[சொல்லாமல் கொல்லும் முடிவு!](https://minnambalam.com/k/2019/03/09/14)�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share