கோயில் திருவிழா போன்ற நிகழ்ச்சிகளின்போது ஆபாச நடனங்கள் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழகக் காவல் துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கோயில்களில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் கலாச்சார நாடகங்களை நடத்துவதற்கு அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு விசாரணையின்போது, கலை நிகழ்ச்சிகள் என்ற பெயரில் ஆபாச நடனம், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறுவதாகக் குற்றம்சாட்டப்பட்டது.
நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு, நேற்று (அக்டோபர் 31) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. முற்காலத்தில் கோயில் திருவிழாக்களின்போது வில்லுப்பாட்டு, கிராமியப் பாட்டு, புராண நாடகங்கள்தான் நடைபெற்றதாகக் குறிப்பிட்டார் நீதிபதி. “தற்போது அறிவியல் முன்னேற்றம் அடைந்துள்ளதால், பல நடனங்கள் கோயில்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
கலாச்சார நடனம் என்ற பெயரில் கோயில் திருவிழாக்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளை, அப்பகுதியைச் சேர்ந்த காவல் துறை வீடியோவாகப் பதிவு செய்ய வேண்டும். அதில் ஆபாசம் இருந்தால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து அனைத்துக் காவல் நிலைய ஆய்வாளர்களுக்கும் டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்” என உத்தரவிட்டார். இந்த மனு மீதான விசாரணையை, நவம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி ஆர்.மகாதேவன்.�,