ஆந்திரப் பிரதேசத்தில் சனிக்கிழமை (பிப்ரவரி 24) தொடங்கிய இந்தியத் தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) மாநாட்டின் முதல் நாளில் அதானி உட்பட பலர் ரூ.31,546 மோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
ஆந்திரப் பிரதேசத்தில் வேலைவாய்ப்புகளை ஊக்குவிக்கும் விதமாகவும், தொழில் முதலீடுகளை அதிகரிக்கும் விதமாகவும் விசாகப்பட்டினத்தில் சி.ஐ.ஐ மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டின் முதல் நாளில் ஆந்திராவில் தொழில் முதலீடு செய்வதற்கான 77 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. உள்கட்டுமானம், ஆற்றல், ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல துறைகளில் முதலீடு செய்யப்படுகின்ற இந்த ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு ரூ.31,546 கோடியாகும். இந்த முதலீடுகளின் மூலம் ஆந்திராவில் சுமார் 1 லட்சம் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் வாகனத் துறையில் 12 ஒப்பந்தங்களும், சுற்றுலாத் துறையில் 56 ஒப்பந்தங்களும், தொழில்துறையில் 4 ஒப்பந்தங்களும், உள்கட்டுமானத் துறையில் 2 ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன. வாகனத் துறையில் ரூ.15,224 கோடியும், சுற்றுலாத் துறையில் ரூ.7,807 கோடியும், தொழில்துறையில் ரூ.3,015 கோடியும், உள்கட்டமைப்புத் துறையில் ரூ.5,500 கோடியும் முதலீடு செய்ய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அதானி, மைத்ரா, கிரேசிம், எஸ்ஸல் குழுமம், மஹிந்த்ரா ஹாலிடேஸ், லூலு, ஜே.பி.எம் குழுமம் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் முதலீடு செய்யவுள்ளன.
கிரீன்ஃபீல்ட் துறைமுகம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் பவனபாடில் மல்டி மாடல் லாஜிஸ்டிக் பூங்கா, சேமிப்பு வசதியுடன் கூடிய 1,000 மெகவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மின்சாரப் பூங்கா போன்றவற்றுக்காக ரூ.9,000 கோடி முதலீடு செய்யவிருப்பதாக அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி தெரிவித்துள்ளார். அதேபோல மைத்ரா நிறுவனம் ரூ.7,000 கோடியும், ஜே.பி.எம் குழுமம் ரூ.2,650 கோடியும், துபாயைச் சேர்ந்த லூலு நிறுவனம் ரூ.2,000 கோடியும், கிரேசிம் குழுமம் ரூ.2,500 கோடியும் முதலீடு செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளன.�,