Cஆடுகளம்: மாயாஜாலப் பந்து!

Published On:

| By Balaji

தினேஷ் அகிரா

*லைன் அண்ட் லெங்த் பந்து வீச்சு பற்றிய [நேற்றைய](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/10/30/17) கட்டுரையின் தொடர்ச்சி…*

ஒரு சில நேரங்களில் முகம்மது ஆஸிப், அவரது மணிக்கட்டு வழக்கம் போல முதல் ஸ்லிப்பைப் பார்க்கும்படியாக இருக்க பந்தை நேரான தையலில் வீசாமல் சற்றே தள்ளாட்டத்துடன் (wobble seam) வீசுவார். வழக்கமாக இம்முறையில் (wobble seam) மற்ற வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும்போது பந்தானது ஸ்விங்கோ ஸீமோ ஆகாமல் பிட்ச் ஆனவுடன் நேராகச் செல்லும். ஆனால், ஆஸிப் வீசும்போது மட்டும் அவரது மணிக்கட்டு முதல் ஸ்லிப்பைப் பார்த்தபடி இருக்கும் காரணத்தால் பந்து முதலில் காற்றில் அவுட் ஸ்விங் ஆகி பிறகு பிட்சில் தையலுடன் விழும். இப்போது பந்தின் தையலானது லெக் ஸ்லிப்பைப் பார்த்தவாறு இருப்பதால் சட்டென உள்நோக்கி திரும்பும். ஒருவேளை பந்தின் தையலானது முதல் ஸ்லிப்பைப் பார்த்தவாறு விழுந்திருந்தால் பந்தானது அவுட் ஸ்விங்குடன் சேர்ந்து அவுட் ஸீம் ஆகி வெளியே செல்லும்.

இதிலுள்ள சிறப்பம்சம் என்னவென்றால் பந்தின் தையலானது லெக் ஸ்லிப்பில் விழுமா அல்லது முதல் ஸ்லிப்பில் விழுமா என்பது மட்டையாளருக்கு மட்டுமல்ல ஆஸிப்புக்குமே பந்தை வீசிய பின்புதான் தெரியவரும். இந்தக் குறிப்பிட்ட பந்தைக் கொண்டுதான் ஆசிப் நிறைய தடவை மட்டையாளனை LBW மற்றும் பவுல்டு முறையில் விக்கெட் எடுத்தார்.

இந்தக் குறிப்பிட்ட விதமான பந்தை (wobble seam) ஆஸிப்பினால் இடக்கை மட்டையாளருக்கு எதிராகவும் லாகவமாக வீச முடியும். மேலும், இந்தக் குறிப்பிட்ட பந்தை நல்ல லெங்தில் தனது உயரத்தைப் பயன்படுத்தி நல்ல பவுன்ஸுடன் ஆசிப் வீசுவதால் மட்டையாளர் முன்னங்காலில் வந்து ஆடுவதா அல்லது பின்னங்காலுக்குப் போவதா என்று தெரியாமல் ஒரு நொடி குழம்பிப்போகிறார். பந்து வெளிப்பார்வைக்கு அவுட் ஸ்விங்போலத் தோற்றமளித்து அடிக்கடி உள்நோக்கியும் திரும்புவதால் மட்டையாளர் தான் எதிர்கொள்ளும் எல்லாப் பந்துகளையும் விளையாட வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகிறார். சிட்னி டெஸ்டில் இந்த மாயாஜாலப் பந்தை வீசித்தான் மைக்கேல் கிளார்க் விக்கெட்டை ஆஸிப் வீழ்த்தினார். உலகின் அதிசிறந்த மட்டையாளர்களைக்கூடச் சராசரி ஆட்டக்காரராகக் காட்டிய இந்தக் குறிப்பிட்ட மாயாஜாலப் பந்தை (wobble seam) முதல்தர உள்ளூர் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தின் மூலம்தான் முகமது ஆஸிப் கண்டெடுத்தார்.

**மட்டையாளருக்கு வைக்கப்படும் பொறி**

கிரிக்கெட்டில் ஒரு மட்டையாளரை ‘செட்டப்’ செய்து விக்கெட் எடுப்பது மிகவும் மதிப்பிற்குரிய ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. அதாவது பொறிவைத்து வீழ்த்துவது. பெரும்பாலும் சுழற்பந்து வீச்சாளர்கள்தான் மட்டையாளனை ஒரு குறிப்பிட்ட வகையிலான விக்கெட்டுக்கு செட் செய்து ஆட்டமிழக்கச் செய்வார்கள். காரணம், அவர்களால்தான் மட்டையாளருக்கு எதிராகக் கறாராக பந்து வீசி ஒற்றை ஓட்டத்தை எளிதில் கொடுக்காமல் அதிகப்படியான பந்துகளை விளையாட வைக்க முடியும். லைன் அண்ட் லெங்த் பந்து வீச்சாளர்களும் இமாதிரியிலான செட்டப்களில் கைதேர்ந்தவர்கள். அவர்களால் ஒரு மட்டையாளரை ரன்களை விட்டுக்கொடுக்காமல் நிறைய பந்துகளை ஆடவைப்பதன் மூலம் அம்மட்டையாளரின் நிறைகுறைகளை எளிதாகக் கணிக்க முடியும்.

ஒருமுறை முகமது ஆஸிப்பிடம் நீங்கள் எடுத்த விக்கெட்களிலேயே மனதிற்கு நெருக்கமானது எதுவெனக் கேட்கப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் ராகுல் திராவிட்டின் விக்கெட்தான் என்றார் ஆஸிப். காரணம் திராவிட் போன்ற தடுப்பாட்டக்காரர்கள் நிறைய நேரம் களத்தில் நிற்பதற்காக ஆட்டத்தின் ஆரம்பத்தில் அதிகப் பந்துகளை எடுத்துக்கொள்வார்கள். இது லைன் அண்ட் லெங்த் பாணி பந்து வீச்சாளர்களுக்குத் தாங்கள் விரும்பும் விதத்தில் விக்கெட்டை செட்டப் செய்வதற்கு உபயோகமாக உள்ளது. ஆனால், ஷோயிப் அக்தர் போன்றவர்கள் திராவிட் போன்றவர்களின் தடுப்பாட்டத்தை மிகவும் வெறுப்பார்கள். ஏனெனில் செட்டப் முறையில் மட்டையாளனை ஆட்டமிழக்கக் செய்யும் பொறுமை அவர்களுக்கு இல்லை.

சில நேரங்களில் பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்களில் தடுப்பாட்டம் தெரிந்த வீரர்களைவிட அதிரடியாக ஆடக்கூடிய மட்டையாளர்கள் பெரிய சேதாரம் ஆகாமல் தப்பிப்பதற்கும் இதுதான் காரணம். இதற்கு நல்லதோர் உதாரணம் 2001 நியூசிலாந்து தொடர். இத்தொடரின்போது மட்டையாட்டத்துக்குச் சவாலான ஆடுகளங்களில் சச்சின், திராவிட் போன்றவர்களே மண்ணைக் கவ்வியபோது சேவாக் மட்டுமே தனி ஒருவனாக ஜொலித்தார்.

**பவுலிங் ஆக்‌ஷன்: Front On மற்றும் High Arm**

லைன் அண்ட் லெங்த் பாணியில் பந்து வீசும் வேகப்பந்து வீச்சாளர்கள் பெரும்பாலும் front- on ஆக்‌ஷன் உடையவர்களாகவே இருக்கிறார்கள். காரணம் Hit the deck முறையில் பந்து வீசுவதற்கு ஒருவருக்கு side – on ஆக்‌ஷனைவிட இம்முறையில் வீசுவது சுலபமாக உள்ளது. ஒரு பவுலர் பெரிய அளவில் தனது கீழ் முதுகுப் பகுதியை வருத்திக்கொள்ளாமல் front- on ஆக்சனில் பந்து வீச இயலும். ஆகையால்தான் இம்முறையில் பந்து வீசும் பெரும்பாலான லைன் அண்ட் லெங்த் பந்து வீச்சாளர்களால் நிறைய ஆண்டுக்குக் காயமில்லாமல் விளையாட முடிகிறது. front – on ஆக்‌ஷனில் பந்து வீசுபவர்களால் வலக்கை மட்டையாளருக்கு எதிராக வீசும்போது பந்தை எளிதாக உள்ளே கொண்டு வர முடியும். கர்ட்னி வால்ஷ், ஆசிப் மெக்ரா போன்றவர்களின் ஸ்டாக் பந்து இன் – கட்டராகவோ அல்லது இன் – ஸ்விங்காகவோ இருப்பது இதன் காரணமாகத்தான். பாகிஸ்தானின் இன்றைய ஹீரோ முகமது அப்பாஸ்கூட அதிகமாக அவுட் ஸ்விங் பந்துகளை வீசுவதில்லை.

சரியாக ஆப் ஸ்டம்பை ஒட்டிய லைனில் பந்தை விழ வைப்பதற்காகப் பெரும்பாலும் ஸ்டம்பை ஒட்டியவாறு ஓடிவந்து பந்து வீசுவார்கள். இதற்கு நல்ல உதாரணம் தென்னாப்பிரிக்காவின் ஷான் பொல்லாக். மேலும் இவர்கள் high – arm ஆக்‌ஷன் உள்ளவராகவும் இருப்பார்கள். உலகின் மிகச் சிறந்த லைன் அண்ட் லெங்த் பந்து வீச்சாளர்களான வால்ஷ், மெக்ரா, பொல்லாக் போன்றோர் high – arm ஆக்‌ஷனில் பந்து வீசக்கூடியவர்களே.

**மன உறுதி, உடல் தகுதி, அனுபவம்**

உலகில் முக்கியமான லைன் அண்ட் லெங்த் பந்து வீச்சாளர்கள் எல்லாருக்கும் குறிப்பிட்டதோர் ஒற்றுமை உள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் கடினமான சூழல்களைக் கடந்து வந்தவர்களாகவோ அல்லது வாழ்வாதாரத்திற்காக அதிகமான உடலுழைப்பைக் கோரக்கூடிய வேலைகளைச் செய்தவர்களாகவோ இருக்கிறார்கள் அல்லது உள்நாட்டுப் போட்டிகளில் நிறைய விளையாடிய அனுபவம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். ஒன்றுக்கொன்று மாறுபட்ட பல்வேறு விதமான ஆடுகளங்களில் பொறுமையை இழக்காமல் ஒரே லைன், லெங்த்தில் தொடர்ந்து வீசுவதற்கு ஒருவருக்கு உடல் தகுதியும், மன உறுதியும், ஆடுகளத்தின் தன்மையைக் கணிப்பதற்குப் போதிய உள்நாட்டு கிரிக்கெட் அனுபவமும் அவசியம். இம்மூன்று காரணிகளைத் தங்களுடைய பின்புலமாகக் கொண்டுள்ள மூன்று முக்கிய லைன் அண்ட் லெங்த் பந்து வீச்சாளர்களை உதாரணமாகப் பார்க்கலாம்.

மெக்ரா தன்னுடைய சிறு பிராயத்தில் விவசாயப் பண்ணையில் கடுமையாக உழைத்தவர். தன்னுடைய பதினாறு வயதில் பகலெல்லாம் விவசாயப் பண்ணையில் கடுமையாக உழைத்துவிட்டு இரவு நேரங்களில் வழக்கமாக ஆஸ்திரேலியர்கள் பயிற்சி பெறும் இடமான தண்ணீர்த் தொட்டியின் எதிரே பந்து வீசிப் பயிற்சி எடுத்திருக்கிறார். ஆனால், கடுமையாகப் பயிற்சி எடுத்தும் மெக்ராவால் உள்ளூர் அளவிலான போட்டிகளில்கூடச் சோபிக்க இயலவில்லை. இன்று உலகின் தலைசிறந்த வேகப் பந்து வீச்சாளர் என்று போற்றப்படும் மெக்ரா அன்றைய நாட்களில் அவர் பயிற்சியெடுத்த அகாடமியினாலேயே குறைத்து மதிப்பிடப்பட்டவர். தன்னுடைய காதலி ஜேன் புற்றுநோயினால் அவதிப்படுவதை அருகில் இருந்து பார்த்தவர் மெக்ரா. சர்வதேச கிரிக்கெட்டுக்குக் காலடி எடுத்து வைத்த முதல் சில ஆண்டுகளிலேயே கடுமையான காயங்களால் பாதிக்கப்பட்டார். தனிப்பட்ட வாழ்கையிலும் தனது ஆட்ட வாழ்வின் ஆரம்ப நாட்களிலும் உடலளவில் மனதளவிலும் தான் எதிர்கொண்ட சவால்கள்தான் தன்னை ஒரு வலிமையான வீரராக மாற்றியது என்கிறார் மெக்ரா.

பாகிஸ்தானின் இன்றைய நட்சத்திரம் முகமது அப்பாஸ் கதை இன்னும் சுவாரஸ்யமானது. பள்ளிப் படிப்பை முடித்தவுடனேயே வெல்டராக, தோல் பேக்டரியில் கூலித் தொழிலாளியாக, உள்ளூர் வக்கீல் ஒருவரிடம் குமாஸ்தாவாக என்று பல்வேறு வேலைகளைச் செய்திருக்கிறார் அப்பாஸ். அது மட்டுமல்லாமல் முதல்தரப் போட்டிகளிலும் சியால்கோட் அணிக்காகப் பத்து ஆண்டுகளுக்கு மேல் விளையாடிய அனுபவம் உள்ளவர். தன்னுடைய சிறு வயதில் வாழ்வாதாரத்துக்காக மிகக் கடுமையான பணிகளைச் செய்த அனுபவமே சர்வதேசக் கிரிக்கெட்டில் தான் பதற்றமின்றி விளையாடக் காரணம் என்கிறார் அப்பாஸ்.

தென்னாப்பிரிக்காவின் வெர்னான் ஃபிலாந்தர், தன்னுடைய அறிமுகப் போட்டியில் எதிர்பார்த்த அளவுக்குச் சோபிக்காமல் போனதால் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டு, பிறகு தன்னுடைய உள்நாட்டு மாகாணமான கேப் கோப்ராஸுக்காகச் சிறப்பாக விளையாடியதன் மூலமாக மூன்றாண்டுகள் கழித்து மீண்டும் தேசிய அணியில் இடம்பிடித்தவர். இங்கு அணித் தேர்வு குறித்து பிலாந்தர் ஒரு முக்கியமான கருத்தை முன்வைக்கிறார் அதாவது உள்நாட்டில் ஒரு சில போட்டிகளில் நன்றாக விளையாடியதை மட்டும் தகுதியாக வைத்துக்கொண்டு இளம் வீரர்களை சர்வதேச அரங்கிற்குள் அவசரமாகக் கொண்டுவருவது தவறு என்கிறார். ஒரு வேகப் பந்து வீச்சாளர் தனக்கான பாணியை அமைத்துக்கொள்வதற்கும் தனது பலம், பலவீனங்களைப் புரிந்துகொள்வதற்கும் கணிசமான எண்ணிக்கையிலான உள்ளூர் போட்டிகளில் ஆடியிருக்க வேண்டும் என்கிறார்.

ஒருவர் நல்ல லைன் அண்ட் லெங்த் பந்து பந்துவீச்சாளராக வெற்றிபெற வேண்டுமென்றால் கண்டிப்பாக அவர் தனிப்பட்ட வாழ்க்கையில் கசப்புகளை அனுபவித்திருக்க வேண்டுமென்றோ, சிறு வயதில் உடல் உழைப்பைக் கோரக்கூடிய வேலைகளைச் செய்திருக்க வேண்டுமென்றோ இங்கு நிறுவ முயலவில்லை. மாறாக, இந்த பாணிப் பந்து வீச்சாளர்களின் தொழில் முறைகளுக்கும் செய்முறை நேர்த்திக்கும் முக்கியப் பின்புலமாக இக்குறிப்பிட்ட காரணிகளும் இருக்கலாம் என்பதுதான் இங்கே முன்வைக்கப்படுகிறது.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share