அணை பாதுகாப்பு மசோதாவைத் திரும்பப் பெற பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளதாகச் சட்டமன்றத்தில் இன்று (ஜூலை 20) முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள அணைகளை முறைப்படுத்தி பாதுகாக்கும் மசோதாவைக் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தி மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதற்குத் தமிழகம் சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் மசோதாவில் சில திருத்தங்களைக் கொண்டு வந்து மத்திய அமைச்சரவை கடந்த ஜூலை 17ஆம் தேதி மீண்டும் ஒப்புதல் அளித்தது. இதன்மூலம் ஒரு மாநிலத்துக்குச் சொந்தமான அணை மற்றொரு மாநிலத்தில் இருந்தால் அதன் பராமரிப்பும், இயக்கமும் தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும். தமிழகத்துக்குச் சொந்தமான முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், துன்னகடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய நான்கு அணைகள் கேரளாவில் உள்ளன. மாநிலங்களுக்கு இடையிலான ஒப்பந்தங்களின் அடிப்படையில் இந்த நான்கு அணைகளையும் தமிழக அரசு தான் நிர்வகித்து வருகிறது. மத்திய அரசு கொண்டு வரும் புதிய மசோதா இந்த நான்கு அணைகளையும், மத்திய அரசு கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வழிவகுக்கிறது.
இந்நிலையில் அணை பாதுகாப்பு மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (ஜூலை 20) சட்டமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், அனைத்து மாநிலங்களில் இருக்கக் கூடிய அணைகளை பாதுகாப்பு என்ற பெயரில் மத்திய அரசு அபகரிக்க முயல்கிறது. அணைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுகளுக்கு உடையது. அணை பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமானால் மத்திய அரசு அதற்கு தேவையான நிதியை ஒதுக்கலாம். அணைகளின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற நினைப்பது கூட்டாட்சித் தத்துவத்தையே மீறுவதாக இருக்கும். இதற்குத் தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்று பேசினார்.
இதற்கு பதில் அளித்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “அனைத்து மாநிலங்களும் ஏற்றுக் கொள்ளும் வரை மசோதாவை ஏற்க கூடாது என்று ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளோம். இந்த மசோதா தமிழகத்துக்கு ஏற்றதல்ல என்று கூறி இதனை திரும்பப் பெற வலியுறுத்தி பிரதமருக்கும் கடிதம் எழுதியுள்ளேன். மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறித்து பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டது. தமிழகத்துக்குச் சொந்தமான அணைகள் கேரளாவில் இருந்தாலும் அவை தமிழகத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அணை பாதுகாப்பு மசோதாவைத் திரும்பப் பெற மத்திய அரசுக்குத் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும்” என்றார்.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: சசிகலா நடத்திய மெகா குடும்ப பஞ்சாயத்து!](https://minnambalam.com/k/2019/07/19/85)**
**[BIG BOSS 3: ஸ்மோக்கிங் ரூம் பஞ்சாயத்து!](https://minnambalam.com/k/2019/07/19/38)**
**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**
�,”