�சூர்யா இந்த ஆண்டு நடிகராகப் பெரிய வெற்றி பெறாவிட்டாலும் தயாரிப்பாளராக அதைச் செய்து காட்டியுள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. ஆனால், கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கத்தின் தயாரிப்பாளராக சூர்யா குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளார். இந்த ஆண்டு வெளியான படங்களின் வசூலில் அப்படம் முன்னணியில் இருக்கிறது.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் என்ஜிகே திரைப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. படம் தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் வெளியாகிய போஸ்டர்களில் வெளியீடு குறித்த அறிவிப்பைப் படக்குழு அறிவிக்கவில்லை. அதே நேரத்தில் சூர்யா கே.வி.ஆனந்த் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார்.
இந்தப் படங்களைத் தொடர்ந்து இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு ஏற்கெனவே வெளியான போதிலும் படப்பிடிப்பு எப்போது தொடங்க உள்ளது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. தற்போது அதன் விவரங்கள் தெரியவந்துள்ளன.
நவம்பர் மாதம் படத்திற்கு பூஜை போடப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கும் இந்தப் படம் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக உள்ளது.�,