நடிகர் அஜித் விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக நடிக்கும் திரைப்படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் விஸ்வாசம்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. சத்யஜோதி நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படம் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது. விஸ்வாசம் படத்தில் தனது காட்சிகள் மற்றும் டப்பிங் பணிகள் என முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டார் அஜித். இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்.
விஸ்வாசம் படம் நடித்துக் கொண்டிருக்கும் போது அஜித்தின் அடுத்தப்படம் பற்றிய தகவல் பல்வேறு யூகங்களுடன் வெளியாகிக் கொண்டிருந்தன. இந்நிலையில், நேற்றிரவு (நவம்பர் 13) சென்னையிலுள்ள போனி கபூர் வீட்டில், போனி கபூர் – அஜித் – ஹெச்.வினோத் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதனால் அஜித்தின் அடுத்தப்படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்குவது உறுதியாகியுள்ளது.
மேலும், இச்சந்திப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க அஜித் தேதிகள் ஒதுக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கவிருப்பதாகப் பல நாட்கள் கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது அதுவும் நிறைவேறியுள்ளது.
இக்கூட்டணியில் உருவாகும் இப்படம், 2016ஆம் ஆண்டு அமிதாப் பச்சன் நடிப்பில் இந்தியில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக்காகும். இதனைத் தமிழுக்கு ஏற்றவாறு முழுமையாக எழுதும் பணிகளில் ஈடுபட்டு வந்தார் ஹெச்.வினோத். இப்பணிகள் முடிவடைந்துவிட்டதால், மூவரும் சந்தித்து எப்போது படப்பிடிப்பு, எத்தனை நாட்கள், படக்குழுவினர் உள்ளிட்ட விஷயங்களை பேசியிருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
�,”