விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரியின் காமராஜர் நகர் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடந்துவருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே காமராஜர் நகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் முன்னிலை நிலவரங்கள் காலை 9 மணியிலிருந்து வெளியாகத் துவங்கியது. இரண்டு தொகுதிகளிலும் ஆரம்பம் முதலே அதிமுக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலையில் இருந்துவருகின்றனர்.
சற்று முன்பு நிலவரப்படி விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தியை விட அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 39,276 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்துவருகிறார். முத்தமிழ்ச்செல்வன் 98,444 வாக்குகளும், புகழேந்தி 59,175 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
நாங்குநேரி தொகுதியைப் பொறுத்தவரை அதிமுக வேட்பாளர் நாராயணன் 42,728 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்துவருகிறார். காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 29,194 வாக்குகளுடன் பின்னடவை சந்தித்துள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 13,534 என்ற அளவில் உள்ளது.
அதிமுக தொடர்ந்து முன்னிலையில் உள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகம் முன்பு அதிமுக தொண்டர்கள் நடனமாடி தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர். சுமார் 12.40 மணியளவில் தலைமைக் கழகத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்றார்.முன்னிலை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “ஸ்டாலினின் குற்றச்சாட்டுகள் எல்லாம் தவிடு பொடியாகிவிட்டன. இடைத்தேர்தலில் அதர்மத்தை தோற்கடித்து தர்மம் வென்றுள்ளது இடைத்தேர்தல் வெற்றியை பார்க்கும்போது 2021 தேர்தலிலும் அதிமுக தான் ஆட்சிக்கு வரும்” என்று தெரிவித்துள்ளார்.�,