இடைத் தேர்தலில் அதிமுக வெற்றி: தலைவர்கள் கருத்து!

Published On:

| By Balaji

இடைத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விக்கிரவாண்டி இடைத் தேர்தல் முடிவுகள் நேற்று (அக்டோபர் 24) வெளியான நிலையில், இரண்டு தொகுதிகளையும் ஆளுங்கட்சியான அதிமுகவே கைப்பற்றியது. விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் புகழேந்தியைவிட 44,924 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார். நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை 33,445 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அதிமுக வேட்பாளர் நாராயணன் வெற்றிபெற்றார்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் உற்சாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். தேர்தல் முடிவுகள் தொடர்பாக அதிமுக மற்றும் திமுகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கருத்துகள் தெரிவித்தனர்.

**முதல்வர், எடப்பாடி பழனிசாமி**

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளிலும் எதிர்பார்த்த மிகப்பெரிய வெற்றியை மக்கள் அளித்திருக்கின்றனர். இரு தொகுதிகளும் ஏற்கனவே திமுக மற்றும் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வென்ற தொகுதிகள். இப்போது அந்தத் தொகுதிகளில் அதிமுக வென்றுள்ளது உண்மைக்குக் கிடைத்த வெற்றி.

கடந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுக கூட்டணியின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் அவர்களுக்கு வாக்களித்ததன் மூலம் வெற்றி பெற்றனர். இப்போது மக்களுக்கு உண்மை புரிந்துவிட்டது. அதனால் அதிமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ளனர். இது 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும். தர்மம், நீதி, உண்மை எப்போதும் வெல்லும் என்பதற்கு இந்தத் தேர்தலில் நிரூபணமாகியிருக்கிறது.

**திமுக தலைவர், மு.க.ஸ்டாலின்**

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி. ஆளும்கட்சியின் பண பலம், அதிகாரத் துஷ்பிரயோகம், சில கட்சிகள் திட்டமிட்டுக் கிளப்பிய சாதி உணர்வு ஆகியவற்றையும் மீறி, பல்லாயிரக்கணக்கான மக்கள் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களித்துள்ளார்கள்.

மக்கள் தீர்ப்பினைத் தலைவணங்கி ஏற்கிறோம்.வாக்களித்தவர்களுக்கு நன்றி சொல்லும் அதேநேரத்தில், வாக்களிக்க மறந்தவர்களின் நம்பிக்கையைப் பெற, மேலும் தொடர்ந்து உழைப்போம். தேர்தலுக்காக உழைத்த அனைவருக்கும் இதயப்பூர்வ நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த காலப் படிப்பினைகளுடன், எதிர்காலத்தை நிச்சயம் வெல்வோம்.

**தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், கே.எஸ்.அழகிரி**

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தல்களில் காங்கிரஸ், திமுக வேட்பாளர்கள் வெற்றி பெறாதது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை இடைத் தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பே இல்லாத நிலை உருவாகி வருகிறது. பொதுவாக, இடைத் தேர்தல்களில் ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் சமநிலைத் தன்மை (Level Playing Field) இல்லாத நிலை இருக்கிறது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அதிகாரபலம், பணபலம் கூடுதலாகவே இருக்கிறது. இதை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாத நிலையில்தான் இடைத் தேர்தல்களில் ஆளுங்கட்சியான அதிமுக வெற்றி பெற்று விடுகிறது.

இத்தகைய வெற்றிகள் மக்களின் உண்மையான மனநிலையைப் பிரதிபலிப்பதாகக் கருத முடியாது. இடைத் தேர்தல்கள் எப்படி நடத்தப்படுகிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். எனவே, இடைத் தேர்தல்களில் ஏன் வெற்றி பெறவில்லை என்பதை காங்கிரஸ் கட்சியினரும், தமிழக மக்களும் புரிந்துகொள்வார்கள்.

**பாமக நிறுவனர், ராமதாஸ்**

இந்த வெற்றி சாதாரணமான வெற்றி அல்ல; சிறப்பான வெற்றி. விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளுமே எதிர்க்கட்சிகள் வசம் இருந்தவையாகும். அவற்றை ஆளும் அதிமுக கைப்பற்றியிருக்கிறது. இதற்குப் பெருமளவில் பாமக பங்களித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

திமுக இந்த இடைத் தேர்தல்களில் அருவருக்கத்தக்க உத்திகளைக் கையாண்டது. விக்கிரவாண்டி தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலினும், அவரது துதிபாடிகளும் மூட்டை மூட்டையாகப் பொய்களை இறக்குமதி செய்து விற்பனை செய்ய முயன்றனர். ஆனால், விழிப்புணர்வு பெற்ற விக்கிரவாண்டி மக்களிடம் பொய் வணிகம் சிறிதும் போணியாகவில்லை. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத் தேர்தல்களின் முடிவுகள் இனி வரும் கால அரசியலுக்கான நல்ல தொடக்கமாகும்.

**மதிமுக பொதுச் செயலாளர், வைகோ**

இடைத் தேர்தல்களில் ஆளும்கட்சி வெற்றி பெறுவது என்பதைக் கடந்த காலங்களில் நாடு பார்த்தது. இந்த இடைத் தேர்தலில் தமிழ்நாட்டில் முழுக்க முழுக்க ஆளும்கட்சியின் அதிகார பலம், அள்ளி வீசப்பட்ட வெள்ளிக் காசுகள் வெற்றியைத் தீர்மானித்து இருக்கிறது.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இரண்டு தொகுதிகளிலுமே அரசு இயந்திரம் முழுமையாக ஆளும் கட்சியின் பக்கம் துணை நின்றது. இடைத் தேர்தல்களின் முடிவுகள் மட்டும் ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனோநிலையைக் காட்டுவதாகக் கருதிவிட முடியாது. ஜனநாயகக் களத்தில் திமுக கூட்டணி மக்கள் சக்தியை ஒன்றுதிரட்டி, அதிமுக ஆட்சியை அகற்றும் என்ற நம்பிக்கை தமிழக மக்களுக்கு இருக்கிறது.

**முன்னாள் மத்திய அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன்**

நாடு முழுவதும் பாஜக ஒரு மாபெரும் சக்தியாக உருவாகி வருகிறது. அதுபோலவே தமிழகத்திலும் பாஜக மாபெரும் சக்தியாக உருவாகியிருக்கிறது என்பதை இந்த இடைத் தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. இனி வரும் காலம் தமிழகத்தில் பாஜகவின் காலமாக மட்டுமே இருக்கும். பாஜக இல்லாமல் அதிமுகவுக்கு இந்த வெற்றி கிடைத்திருக்காது.

**மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர், கே.பாலகிருஷ்ணன்**

விக்கிரவாண்டி , நாங்குநேரி தொகுதி வெற்றி 2021இல் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலுக்கான முன்னோட்டம் என முதலமைச்சர் கூறியிருப்பது எதார்த்தத்துக்குப் பொருத்தமற்றதாகும். இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவதும், அடுத்து நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் அதே கட்சி படுதோல்வி அடைவதும் தமிழக தேர்தல் வரலாற்றில் வழக்கமான ஒன்றே. ஆகவே, முதல்வரின் கூற்றைத் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.

இந்த இடைத் தேர்தலில் அதிமுக கூட்டணியின் அதிகாரம், ஆட்சி மற்றும் பணபலம் வெற்றி பெற்றுள்ளது என்பதே நிதர்சனமான உண்மையாகும். இதற்கெல்லாம் ஆட்படாமல் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களித்த வாக்காளர் பெருமக்களுக்கும், தேர்தல் பணியாற்றிய கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

**நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர், சீமான்**

அதிமுக வெற்றியை விலைக்கு வாங்கி இருக்கிறது. வாக்குக்குப் பணம் கொடுக்கும் வழக்கம் இருக்கும் வரை ஒரு நல்ல அரசு அமையாது. பிறகு எப்படி தன்னலமற்ற தலைவர்கள் வருவார்கள். இந்தப் போக்கை வரும் தலைமுறையினர் வெகுண்டெழுந்து வீழ்த்த வேண்டும்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share