மொபைல் டேட்டா ஆன் செய்ததும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.
“வரும் அக்டோபர் 21ஆம் தேதி நடக்க இருக்கும் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத் தேர்தல்கள் பணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருக்கிறார். உளவுத் துறை மூலமாக இரு தொகுதிகளின் ஆக்சுவல் நிலவரம் என்ன என்ற ரிப்போர்ட்டை மிகைப்படுத்தாமல் கொடுங்கள் என்று கேட்டுவரும் எடப்பாடி, இன்னொருபக்கம் தனக்கு நெருக்கமான அதிமுக கட்சிப் பிரமுகர்கள் மூலமாகவும் இரு தொகுதிகளைப் பற்றி உன்னிப்பாகக் கேட்டு வருகிறார்.
இந்த இரண்டு வகைகளைத் தாண்டி மூன்றாவதாக இன்னொரு வகையிலும் எடப்பாடியின் ‘சர்வே விசாரணை’ கவனம் திரும்பியிருக்கிறது. கடந்த வாரம் சேலம் சென்ற தமிழக முதல்வரிடம் அவருக்கு நெருக்கமான சேலம் பிரமுகர்கள், ‘அண்ணா… நம்ம சேலம் ஜோசியர் பாலாஜி ஹாசன் இதுக்கு முன்னாடி சொன்னதெல்லாம் தேர்தல் ரீதியா நடந்திருக்கு. இப்ப கூட துர்கா ஸ்டாலின், வாரம் ஒரு தடவை அவரைப் பார்த்துட்டு போறாங்க. வேலூர் தேர்தல்ல திமுக சார்பா யார் நின்னாலும் ஜெயிக்கும்னு அவர் அப்ப சொன்னாரு. இப்ப இடைத் தேர்தல் சம்பந்தமா அதிமுகவுக்கு எப்படி இருக்கும்னு அவர்கிட்ட கேட்டுப் பார்க்கலாமா…’ என்று எடப்பாடியிடம் கேட்டிருக்கிறார்கள்.
இதற்கு எடப்பாடியும் சம்மதம் தெரிவிக்க, சேலத்தைச் சேர்ந்த எடப்பாடிக்கு நெருக்கமான வட்டாரத்தில் இருந்தே பாலாஜி ஹாசனுக்கு போன் போடப்பட்டிருக்கிறது. விஷயத்தைச் சொல்ல, அவரோ இரு அதிமுக வேட்பாளர்களின் ஜாதகத்தையும் கேட்டிருக்கிறார். அதன்படியே வாட்ஸ் அப்பில் விக்கிரவாண்டி முத்தமிழ்ச்செல்வன், நாங்குநேரி நாராயணன் ஆகியோரின் ஜாதகத்தை ஜோதிடர் பாலாஜி ஹாசனுக்கு அனுப்பிவைத்திருக்கிறார் எடப்பாடிக்கு நெருக்கமான அந்த சேலம் அதிமுக புள்ளி.
இதன்பின் ஜோதிடர் பாலாஜி ஹாசன் சொன்ன விவரங்களை எடப்பாடியையே பார்த்துச் சொல்லியிருக்கிறார் அந்தப் புள்ளி. ‘பாலாஜி ஹாசன் சொல்றபடி விக்கிரவாண்டியில அதிமுக ஜெயிக்குமாம். ஆனா, வித்தியாசம் ரொம்ப ரொம்ப கம்மியாய் இருக்கும்னும் 9 அல்லது 99 அல்லது 199 இப்படிங்குற அளவுலதான் வித்தியாசம் இருக்கும்னும் அந்தத் தம்பி சொல்லுது. ஆனா, நாங்குநேரியில நாம போட்டிருக்கிற வேட்பாளரோட ஜாதகம் சரியில்லாததால காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ட்ராங்கா இருக்காராம். திமுக சைடுல வேட்பாளர் தேர்வுக்கு முன்னாடியே ஜாதகத்தை அவர்கிட்ட கொடுத்து வாங்கிதான் முடிவு பண்ணாங்களாம். அதுபோல நாமளும் பண்ணியிருக்கலாமோ’ என்று எடப்பாடியிடம் எடுத்து சொல்லப்பட்டிருக்கிறது.
இதைக் கேட்டு கடந்த இரு நாட்களாகவே அப்செட்டில் இருக்கிறார் எடப்பாடி என்கிறார்கள். ஆனாலும், முதல்வர் தரப்பில் இருந்து ஜோதிடருக்கு பேசிய அந்தப் புள்ளி, ‘நாங்குநேரியில் நாங்க ஜெயிக்கணும்னா பரிகாரம் எதுவும் இருக்கா?’ என்று கேட்டிருக்கிறார். அதற்காக ஜோதிடர், பிரசாரம் செய்யும் நேரம், ஓட்டுப் போடும் நேரம் ஆகியவற்றில் சில மாற்றங்களைச் செய்து அதற்கான நேரம் குறித்துக் கொடுத்திருக்கிறார். இப்போது நாங்குநேரி வேட்பாளர் இதன்படியே பிரச்சாரம் செய்ய வேண்டுமென்றும், அவர் வழிபாடு செய்ய வேண்டிய கோயில்களையும் குறித்துக் கொடுத்திருக்கிறார். ஏற்கனவே நாங்குநேரி நாராயணன், நாங்குநேரி ஒன்றியப் பெருந்தலைவர் தேர்தலில் போட்டியிட்டு ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை நழுவியவர் என்பதையும் இப்போது பாலாஜி ஹாசன் சொல்லும் ஜாதகக் காரணங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் அதிமுகவினர் பிரச்சாரத்தோடு பரிகார நடவடிக்கைகளிலும் தீவிரமாகியிருக்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
�,”