‘என்.ஆர்.சி விளைவு’: மேற்கு வங்கத்தில் வீழ்ந்த பாஜக!

Published On:

| By Balaji

மேற்கு வங்கம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் நடைபெற்ற இடைத் தேர்தலில், மேற்கு வங்கத்தில் மூன்று தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும், உத்தராகண்ட்டில் ஒரு தொகுதியில் பாஜகவும் வெற்றி பெற்றுள்ளது.

**மேற்கு வங்கம்**

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கரீம்பூர், காரக்பூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் கடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று எம்.பி.க்களாக ஆனதால் இந்தத் தொகுதிகள் காலியானது. அதேபோல, அம்மாநிலத்தில் உள்ள காளியாகஞ்ச் சட்டமன்றத் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ பர்மாநாத் ராய் காலமானதால் காளியாகாஞ்ச் தொகுதியும் காலியானது. கடந்த 25ஆம் தேதி, இம்மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடந்தது. அதன் வாக்குகள் நேற்று (நவம்பர் 28) எண்ணப்பட்டன.

இதில், காளியாகஞ்ச் தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தபான் தேவ் சின்ஹா, பாஜக வேட்பாளர் கமல் சந்திராவை விட 2,418 வாக்குகள் அதிகம் பெற்றார். கரக்பூர் தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் பிரதிப் சர்க்கார், பாஜக வேட்பாளர் பிரேம் சந்த்ஜாவை விட 20,788 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். கரீம்பூர் தொகுதியில் திரிணாமூல் வேட்பாளர் பிமலேந்து சின்ஹா ராய், பாஜக வேட்பாளர் ஜெய்பிரகாஷ் மஜும்தாரைவிட 24,119 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இடைத் தேர்தல் நடைபெற்ற மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. இடைத்தேர்தலில் பெற்ற வெற்றியை அடுத்து, கட்சி வேட்பாளர்களை வாழ்த்திய மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, “பாஜகவின் ஆணவம் மற்றும் ஆட்சிக்கு வருவதற்கான அதிகாரப்பசி ஆகியவற்றுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர்” என்றார்.

மேலும், “எங்கள் கட்சி உருவான 21 ஆண்டுகளில், நாங்கள் ஒருபோதும் கரக்பூர், காளியாகஞ்ச் தொகுதிகளில் வென்றதில்லை. இந்த வெற்றியைப் பரிசளித்த மக்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) என்ற பெயரில் பாஜக மக்கள் மத்தியில் பீதியை உருவாக்கியுள்ளது. ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் வங்காளத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கொல்லப்படுகிறார்கள்” எனக் கூறினார்.

பாஜக வேட்பாளர் கமல் சந்திர சர்க்கார், தேர்தல் முடிவுகளில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, என்.ஆர்.சி விவகாரம் காளியாகஞ்ச் இடத்தைப் பறித்தது எனக் கூறினார். கமல் கூறும்போது, “என்.ஆர்.சி எங்களுக்கு ஒரு பெரிய அடியை ஏற்படுத்திவிட்டது. அது எங்கள் பலவீனம். என்.ஆர்.சி விவகாரத்தால் மக்கள் பீதியடைந்துள்ளார்கள் என்பதை இப்போது நாங்கள் உணர்ந்துள்ளோம். எங்களால் இவ்விவகாரத்தை மக்களிடம் சரியாக எடுத்துச் சென்று புரியவைக்க முடியவில்லை” என்றார்.

**உத்தராகண்ட்**

உத்தராகண்ட் மாநிலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது.

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகார் தொகுதியில் மூன்று முறை வெற்றி பெற்று அமைச்சராக இருந்த பிரகாஷ் பண்ட் ஜூலை மாதம் 5ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து பித்தோராகார் தொகுதி காலியானது. அதனைத் தொடர்ந்து, பிரகாஷ் பண்ட் மனைவி சந்திரா பண்ட்டைப் போட்டியிட செய்தது பாஜக. காங்கிரஸ் கட்சி சார்பில், அஞ்சு லுந்தி போட்டியிட்டார். கடந்த 25ஆம் தேதி நடைபெற்ற இடைத் தேர்தல் முடிவுகள் நேற்று (நவம்பர் 28) வெளியானது.

இதில் பாஜக வேட்பாளர் சந்திரா பண்ட், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அஞ்சுவை (காங்கிரஸ்) விட 3,267 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் பாஜக பித்தோராகார் தொகுதியை மீண்டும் தக்கவைத்துள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share