எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகிவரும் லாபம் படத்தின் படப்பிடிப்பு முடிந்தபின், படத்திற்காக பிரத்யேகமாக கட்டப்பட்ட கட்டிடத்தை ஊர் மக்களுக்கு விஜய் சேதுபதியால் பரிசாக வழங்கப்பட்டது.
எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி புறம்போக்கு என்கிற பொதுவுடமை படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தைத் தொடர்ந்து இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம் லாபம். ஸ்ருதிஹாசன் இப்படத்தில் நாயகியாக நடிக்கின்றார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு குன்றத்தார் அருகிலுள்ள பெருவயலில் நடைபெற்றுவந்தது.
அதில் ஒரு முக்கியமான காட்சிக்காக விவசாயிகள் சங்கக் கட்டிடம் தேவைப்பட்டிருக்கிறது. அந்தக் கட்டிடத்தை படப்பிடிப்பு நடந்துவரும் கிராமத்தில் செட்டாகப் போடாமல் உண்மையான கட்டிடத்தையே தனது செலவில் கட்டச்சொல்லி இருக்கிறார் விஜய் சேதுபதி. அதன் பின்னர், இக்கட்டிடம் உருவாக்கப்பட்டு படப்பிடிப்பும் நடைபெற்று முடிந்திருக்கிறது. அதன் பின்னர், இக்கட்டிடத்தை ஊர் மக்களுக்கே பரிசாக அளித்துள்ளார் விஜய் சேதுபதி. ஊர் மக்களும் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டனர்.
எஸ்.பி. ஜனநாதன் இயக்கும் படங்கள் என்றாலே அதில் நிச்சயம் அரசியல் இருக்கும். தனது முதல் படமான இயற்கைக்குப் பின், இரண்டாவதாக இயக்கிய ‘ஈ’ மெடிக்கல் கிரைம் பற்றியும், ‘பேராண்மை’ இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக்காக ராக்கெட் ஏவுவதை அந்நிய சக்திகள் தடுப்பதைப் பற்றியும், ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ படத்தில் தூக்கு தண்டனை விதித்தலுக்கு எதிராகவும் என தன் சினிமாவின் வழி தொடர்ந்து அரசியல் குரல் கொடுத்து வருபவர் ஜனநாதன். தற்போது இவர் இயக்கி வரும், லாபம் திரைப்படமும் விவசாயிகளுக்கு இருக்கும் பிரச்சினையை விரிவாக பேசவுள்ளது.
கலையரசன், ஜெகபதி பாபு, சாய் தன்ஷிகா, ஹரீஷ் உத்தமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். 7சிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து விஜய்சேதுபதி இந்தப் படத்தை தயாரிக்கிறார். இமான் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்து வருகிறார். இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கி நடைபெறவுள்ளது.
�,”