கொரோனாவால் இறந்தவர்களின் உடல் அடக்கம்: நீதிமன்றம் கேள்வி!

public

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடல்களை கையாளும் விதம் குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பூந்தமல்லியை சேர்ந்த நரம்பியல் நிபுணரான மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய அண்ணாநகர் வேலங்காடு பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியான நிலையில், இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது.

இவ்வழக்கில், கண்ணியமான நல்லடக்கம் என்ற உரிமை புனிதமான மருத்துவத் தொழில் செய்தவரின் உடலுக்கு வழங்கப்படவில்லை என்று ஏற்கனவே நீதிபதி சத்தியநாராயணன் மற்றும் நிர்மல்குமார் அமர்வு வேதனை தெரிவித்திருந்தது.

இந்த வழக்கு மீண்டும் இன்று (ஜூலை 8) விசாரணைக்கு வந்த போது, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான நடைமுறைகள் என்ன? உடல் அடக்கம் தொடர்பாக ஐசிஎம்ஆர் வகுத்துள்ள விதிமுறைகள் என்ன? என்பது குறித்து தமிழக அரசு வரும் ஜூலை 10 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

**-கவிபிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *