~பட்ஜெட் படங்களே தமிழ் சினிமாவின் உயிர் மூச்சு!

Published On:

| By Balaji

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது ‘மிக மிக அவசரம்’ படத்தை இயக்கி தயாரித்துள்ளார்.

கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளனர். சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார். லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் இப்படத்தை வெளியிடுகிறார்.

‘மிக மிக அவசரம்’ கடந்த அக்டோபர் மாதம் 11ஆம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அப்போது சில திரைப்படங்கள் முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென இதே தேதியில் ரிலீஸானது. அதனால் இந்தப் படத்திற்கு போதிய அளவு தியேட்டர்கள் கிடைக்காததால் அந்த தேதியில் ரிலீஸ் ஆகவில்லை. அதன் பிறகு தீபாவளி முடிந்து தியேட்டர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று தற்போது சுமூகமாக இன்று (நவம்பர் 8) இந்த படம் தமிழகம் முழுக்க 125 திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது.

இதற்கு பின்னணியில் உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் சங்கத்தின் அரசு தரப்பு கமிட்டி உறுப்பினர்களுக்கும், மாநில அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்கும் விழா நேற்று(நவம்பர் 7) மாலை சென்னையில் நடைபெற்றது.

**ரவீந்தர் சந்திரசேகரன்**

இந்த படத்தை கடந்த அக்டோபர் 11 ஆம் தேதியே ரிலீஸ் செய்வதாக அறிவித்தபோது எனக்கு வெறும் 7 தியேட்டர்கள் மட்டும் தான் கிடைத்தது. அந்த சமயத்தில் இந்த நல்ல படத்திற்காக மிகப்பெரிய அளவில் செலவு செய்து, விளம்பரம் செய்தும் போதுமான தியேட்டர்கள் கிடைக்கவில்லையே என்கிற மன அழுத்தம் எனக்கு ஏற்பட்டது.

இதை அப்போது பத்திரிகையாளர் சந்திப்பிலும் வெளிப்படுத்தி இருந்தேன். ஆனால் அதன்பிறகு இதைக் கேள்விப்பட்ட திரையுலக முக்கியஸ்தர்கள் எனக்கு ஆறுதல் கூறியதோடு கொஞ்ச நாள் காத்திரு, இந்த படத்திற்கு சரியான நிறைய தியேட்டர் கிடைக்க ஏற்பாடு செய்கிறோம் என்று என்னை ஊக்கப்படுத்தவும் செய்தார்கள்.

அவர்கள் சொன்னபடி இதோ எனக்கு இப்போது 125 தியேட்டர்கள் மிக மிக அவசரம் படத்திற்காக கிடைத்துள்ளது.. உண்மையிலேயே தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் சொல்வதைப்போல அவர்கள் வழிகாட்டுதலின்படி நாம் நடந்தால், சரியான நேரத்தில் சிறிய படங்களை ரிலீஸ் செய்து தருவதற்கு அவர்கள் தயாராகவே இருக்கிறார்கள் என்பதை இந்த நன்றி அறிவித்தல் கூட்டம் மூலமாக வெளிப்படுத்தியே ஆகவேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்வை நடத்துகிறோம். இந்த சமயத்தில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ மற்றும் விஜயபாஸ்கர் இருவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

**படத்தின் நாயகி ஸ்ரீபிரியங்கா**

மாண்புமிகு அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் என்னை அழைத்து பாராட்டிய அந்த தருணத்தில், இந்த நிலைக்கு நான் வந்திருப்பது கடவுள் கொடுத்த பரிசு என்று நினைத்தேன். இந்த படத்தை வெளியிடுவதற்காக ரவீந்தர் சந்திரசேகரன் ரொம்பவே போராடியிருக்கிறார். ஏற்கனவே ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டபோது, சிலர் இப்படியே ரிலீஸ் செய்துவிடலாம் இனி ஏன் தேதியை மாற்றவேண்டும் என்று கூட அவரிடம் சொல்லி இருக்கலாம். ஆனால் இந்த படத்தின் மீது உள்ள நம்பிக்கையில் இதை பெரிய அளவில் ரிலீஸ் செய்ய வேண்டும் என உறுதியாக அவர் எடுத்த முடிவுக்கு நான் தலைவணங்குகிறேன்.

**தயாரிப்பாளர் கே.ராஜன்**

தியேட்டர்காரர்களை குறை சொல்வதை விட பெரிய படங்கள் வரும்போது சிறிய படங்கள் போட்டி போடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் தியேட்டர்களை நடத்துவதற்கான நடைமுறை செலவுகளுக்கு பெரிய படங்களிலிருந்து கிடைக்கும் பணம் தேவைப்படுகிறது. வருடத்திற்கு சுமார் 25 முறை மட்டுமே அந்த சூழல் அமையும். இருந்தாலும் வருங்காலத்தில் பண்டிகை நாட்களில் பெரிய படங்களுடன் ஒன்று இரண்டு சிறிய படங்களையும் ரிலீஸ் செய்யும் முறையை கொண்டுவர வேண்டும்.

**நடிகர் எஸ்.வி.சேகர்**

தயாரிப்பாளர் சங்கத்தில் அரசாங்கம் நியமித்துள்ள ஆலோசனைக்குழு கமிட்டியாகத்தான் நாங்கள் இருக்கிறோம். மிக மிக அவசரம் படம் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகவில்லை. கடைசி நேரத்தில் வேறு படங்கள் உள்ளே நுழைந்துவிட்டது. நாம் டிஸ்ட்ரிபியூட்டர்களையும் தியேட்டர்காரர்களையும் குறை சொல்வதில் பயன் இல்லை. காரணம் தயாரிப்பாளர்களுக்குள் இருந்த சுயகட்டுப்பாடு மீறப்பட்டுள்ளது.

அப்படி ஒரு நடைமுறை முதலில் இருந்தது. ஆனால் திரையுலகில் திடீரென ஏற்பட்ட வேலைநிறுத்த போராட்டம் காரணமாக ஏற்பட்ட சூழல் தான் தற்போது இப்படி ஒரு கமிட்டி அரசாங்கத்தின் மூலம் வரும்படியாக சூழல் ஏற்பட்டுவிட்டது. கடந்த வருடம் மட்டும் சிறிய பட்ஜெட் படங்களுக்கு 480 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சிஸ்டம் சரியாக இருந்தால் திரையுலகம் சரியாக இயங்கும்.

சுரேஷ் காமாட்சி சமூக நோக்கில் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கருத்துடன் கமர்சியல் அம்சங்களும் இருக்கின்றன. இந்த படம் வெளியான பின்பு அனேகமாக தமிழக அரசு தமிழ்நாடு முழுவதும் பெண் காவலர்களுக்காக மொபைல் டாய்லெட் ஏற்பாடு செய்வார்கள் என நிச்சயம் நம்புகிறேன். சாலைகளில் ஒருவன் சிறுநீர் கழிக்கிறான் என்றால் அது அவனது குற்றமல்ல. அரசாங்கத்தின் தவறுதான்.. இது அனைத்து போலீஸ்காரர்களும் பார்க்க வேண்டிய ஒரு படம். அதுமட்டுமல்ல இந்த படத்திற்கு அரசாங்கம் வரிவிலக்கு கொடுத்தால் நன்றாக இருக்கும், இதை ஒரு வேண்டுகோளாக நான் வைக்கிறேன்.

**ரோகிணி தியேட்டர் அதிபர் பன்னீர்செல்வம்**

அரசாங்கத்தில் பல விருதுகள் வழங்குகிறார்கள். நன்றாக பராமரிக்கப்படுகின்றன திரையரங்குகள் என்கிற விருது ஒன்றை வழங்கினால் நன்றாக இருக்கும். எந்த படமாக இருந்தாலும் அதை இணையதளத்திலும் ஆன்லைனிலும் பார்க்காமல் தியேட்டரில் பார்த்தால் மட்டுமே அது பெரிய படமாக கருதப்படும் சின்ன படங்கள் ஓடவேண்டும் என்றுதான் நாங்கள் நினைக்கிறோம். திரையரங்குகளுக்கு வருவதற்கு முன் இந்தப்படம் ஓடும் ஓடாது என்று எங்களுக்கு தெரியாது. ஆனால் வரும் அத்தனை படங்களும் ஓடவேண்டும் என மற்ற யாரையும் விட திரையரங்கு உரிமையாளர்கள் மட்டுமே நினைக்கின்றோம்.

இந்த படம் ரிலீஸ் ஆகாதபோது சுரேஷ் காமாட்சி எங்களையெல்லாம் திட்டி பேட்டி கொடுத்திருந்தார். அதில் எங்களுக்கு கொஞ்சம் வருத்தம் உண்டு எங்களுக்கு எந்தப்படம் என்ற பாரபட்சம் எதுவுமில்லை. தற்போதுள்ள அமைச்சரிடம் பெரிய திரையரங்குகளை சிறிய திரையரங்குகள் ஆக மாற்றுவதற்கு அனுமதி அளிக்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறோம். அப்படி செய்துவிட்டால், அதன்பிறகு உங்கள் படத்தை எங்களுக்கு தாருங்கள் என உங்கள் வாசலில் நாங்கள் வந்து நிற்போம். ஆகவே எங்களை தயவு செய்து திட்டாதீர்கள்” என்று கூறினார்.

**இயக்குநரும் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி **

இந்த படத்தை நாங்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி அக்டோபர் 11ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடியவில்லை. அந்த வருத்தத்தில் நான் கொஞ்சம் காரசாரமாக அறிக்கை எல்லாம் கொடுத்திருந்தேன். அந்த சமயத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் ஆலோசனைக்குழு கமிட்டியினர் அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என எங்களை அழைத்து ஆலோசனை நடத்தியதில், இந்த தேதியில் (நவ.8) ரிலீஸ் செய்யலாம் என முடிவு செய்தோம். நான் எனது படத்திற்கு தியேட்டர் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் பேசவில்லை. எப்போதுமே நான் சின்ன படங்களுக்கு நிறைய தியேட்டர்கள் கிடைக்கவேண்டும் என்று தான் பேசி வருகிறேன்.

சிறிய படங்கள்தான் இன்று தமிழ் சினிமாவை வாழ வைக்கின்றன. பெரிய படங்கள் வருடத்திற்கு பத்து படங்கள்தான் வெளியாகும் அவை இந்த தமிழ் சினிமாவை நம்பி இருக்கும் தொழிலாளர்களை காப்பாற்றி விடும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

சிறிய படங்கள் ஓடும் ஓடாது என்பதை நாம் முடிவு செய்ய தேவையில்லை. அதை தியேட்டரில் படம் பார்க்கும் மக்கள் முடிவு செய்து கொள்ளட்டும். படம் நன்றாக இல்லை, ஓடவில்லை என்றால் அதை தியேட்டரில் இருந்து எடுத்துவிட வேண்டியதுதான். அதற்காக ஓடாத படத்தை வைத்துக்கொண்டு தியேட்டர்காரர்களும் கஷ்டப்பட வேண்டிய அவசியமும் இல்லை. எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். படம் ஓடவேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கையாக இருந்தது.

*இந்த விழாவில் அபிராமி ராமநாதன், ரோகிணி பன்னீர்செல்வம், எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர் கே.ராஜன், இந்தப்படத்தை வெளியிடும் லிப்ரா ரவீந்தர் சந்திரசேகரன், படத்தின் நாயகன் அரீஷ்குமார், நாயகி ஸ்ரீபிரியங்கா மற்றும் இந்தப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி ஆகியோரும் கலந்து கொண்டனர்*.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share